கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன பகுதிகளில் இடம் பெற்ற கலவரத்திற்கு புதிய கட்சி ஒன்றுடன் தொடர்புடைய பாராளு மன்ற உறுப்பினர்கள் இருவர் தொடர்புபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் அந்த இருபாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி சபையில் கோரிக்கை விடுத்ததை அடுத்து நேற்று கூட்டு எதிர்க்கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி பேசியதனை அடுத்தே இந்த சர்ச்சை ஏற்பட்டது.
இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கூறும் போது,
குளியாப்பிட்டி வியாபார ஸ்தலம் தீயிடப்பட்டமையின் எனது நெருங்கிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார். இந்த குற்றசாட்டை நான் நிரகாரிக்கின்றேன். எனது தொகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எவரும் இதில் தொடர்புப்படவில்லை. அத்துடன் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. குட்டி தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் இவ்வாறான கலவரத்தை உண்டு பண்ணுவதென்றால் பெரிய தேர்தலில் வெற்றி கிடைத்தால் என்ன நடக்கும். ஆகவே இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பந்துல குணவர்தன உரையாற்றுகையில்
நாட்டில் ஏற்பட்டுள்ள இனமுறுகல் நிலையை முற்றாக இல்லாமல் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் பூரண ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளோம். எனினும் அரச பத்திரிகையொன்றில் கண்டி கலவரத்திற்கு புதிய அரசியல் கட்சியுடன் தொடர்புடைய இருவர் தொடர்புப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்டதாகவும் கூறி செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பிரகாரம் இவ்வாறான செய்தியை அரச பத்திரிகையில் வெளியிட முடியும். அத்துடன் இவ்வாறான செய்தியினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு சபாநாயகர் தான் பாதுகாவலராகும் என்றார்.
"" அந்த கூற்றை நான் ஏற்கின்றேன். தற்போது இது தொடர்பாக உரிய விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். அந்த விசாரணைகள் முடிந்த பின்னரே உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.
இதன்போது இடைநடுவே எழுந்து பேசிய நளின் பண்டார எம்.பி,
நாட்டில் பாரியளவிலான இனக்கலவரங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவாகும். எனினும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்ந்து இனவாதத்தை தூண்டியதன் விளைவாகவே இவ்வாறான கலவரங்கள் ஏற்பட்டன என்றார்.
இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க உரையாற்றுகையில்
கண்டி மாவட்ட கலவரம் தொடர்பாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கருத்தை மையமாக கொண்டு அரச பத்திரிகையொன்று இதனை தலைப்பு செய்தியாக பிரசுரித்துள்ளது. ஆகவே இதனை சிறிதாக கணக்கிட முடியாது. இந்த செய்தியினை அரச பத்திரிகையொன்றே வெளியிட்டுள்ளது. ஆகவே புதிய கட்சியுடன் தொடர்புடைய இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதனை மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் அறிய வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்பது தெட்ட தெளிவாக விளங்கிவிட்டது. ஆகவே இரு உறுப்பினர்கள் யார்? இவர்கள் தொடர்பில் விசாரணை ஏதும் நடத்தப்படுகின்றதா? என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய விசாரணை நடைபெறுகின்றது. தற்போது இதனை பேசுவதில் பிரயோசனம் இல்லை. விசாரணை முடிந்த பின்னரே இது தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என மீண்டும் கூறினார்.
சபாநாயகரே அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் யார் என்பது தொடர்பில் தகவல்கள் உறுதியாகியுள்ளன. இதன்படி அந்த இருவர் பெயரையே கோருகின்றோம் என்று அநுர குமார திஸாநாயக்க எம்.பி கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உரையாற்றுகையில்
கண்டி தெல்தெனிய சம்பவத்துடன் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக அரச பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாக கொண்டு எம்மீது குற்றம்சுமத்தப்படுகின்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது நானும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தேன். இந்த சந்தர்ப்பத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பிரதமரும் இவ்வாறான தகவலையே கூறினார். இனக்கலவரத்தின் பின்னணியில் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறினர். இதன்பிரகாரமே மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தனர். அதனை மக்கள் விடுதலை முன்னணி தற்போது மறந்துள்ளது. இவவாறான நிலைமையை தற்போது எமக்கு ஏற்படுத்த போகின்றனர் . கண்டி கலவரத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியே சம்பந்தப்பட்டுள்ளது. எனினும் போலியான முறையில் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர் என்றார்.
இதன்போது ரோஹித்த அபேகுணவர்தன உரையாற்றுகையில்
இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை நாம் நிறுத்தி கொண்டு ஸ்தம்பிதம் ஆகியுள்ள நாட்டை வழமைக்கு கொண்டு வர வேண்டும். தற்போது முஸ்லிம் தாயும் சிங்கள தாயும் அழுகின்றனர். இரு இனத்தவர்களும் அச்சத்துடனும் அவநம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகின்றனர். இதன் தாக்கம் தனி இனத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதனை மக்கள் பிரதிநிதிகளினால் புரிந்து கொள்ள முடியாது. இரு இனக்குழுக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இதன் தாக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும். முதலில் அமைச்சரவை இணை பேச்சாளராக உள்ள ராஜித சேனாரத்னவின் பதவியை பறிக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உரையாற்றுகையில்
அம்பாறையில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதலையும் தற்போது எம்மீது சுமத்த பார்க்கின்றனர். நீண்டகாலமாக அம்பாறையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்றார்.
நாம் யார் மீதும் குற்றம்சுமத்தவில்லை. யாருடைய பெயரையும் கூறவில்லை. நாம் 225 பேரில் அந்த 2 பேர் யார் என்றே கேட்கின்றோம் என அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
இதனையடுத்து கூட்டு எதிர்க்கட்சியின் சிசிற ஜயகொடி எம்.பி குறிப்பிடுகையில்
மக்கள் விடுதலை முன்னணி தனக்கு முன்பு நேர்ந்த அநீதியை மறந்து தற்போது அரசாங்கத்திற்கு விலைக்கு போயுள்ளனர் என்பது தெட்டதெளிவாகியுள்ளது. வலுகட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது திருத்தங்களை முன்வைக்காமல் பலவந்தமாக நிறைவேற்ற முனைந்த போது அதனை எதிர்க்காமல் வாய்மூடிக்கொண்டு வெளியேறி சென்றனர் என்றார்.
இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திஸாநாயக்க மற்றும் நிஹால் கலபத்திவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிற ஜயகொடிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு எதிர்த்தனர். அதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய விசாரணை தற்போது நடைபெற்று வருகின்ற காரணத்தை கூறி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.


Post a Comment
Post a Comment