இலங்கை அணி வெற்றி



சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் அடைந்த வெற்றி அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடனான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் 90 ஓட்டங்களைப் பெற்றார்.

175 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா 37 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசினார்.

மத்தியவரிசையில் சகலதுறை வீரரான திஸ்ஸர பெரேரா 10 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதேவேளை குசல் ஜனித் பெரேராவின் அபாரமான துடுப்பாட்டம் தொடர்பில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் கருத்து தெரிவித்திருந்தார்.