வவுனியா நகர சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகின்றது. இரண்டு கட்சிகளும் ஏனைய கட்சிகளை வளைத்துப்போட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதில் மும்முரமாக உள்ளன.
தொங்கு நிலைகளில் உள்ள சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகர சபையின் தவிசாளர் தெரிவு இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகர சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன தலா 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி., சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொண்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பவற்றின் ஆதரவைத் திரட்டியுள்ளன. கூட்டமைப்பிடம் 8 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவளித்தாலும் ஒன்பது ஆசனங்களை மாத்திரமே கூட்டமைப்பால் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள், வவுனியா மாவட்ட தமிழ் அரசுக் கட்சி தலைமையால் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினரே வவுனியாவில் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நகர சபையில் உபதவிசாளர் பதவி, வவுனியா தெற்கில் தவிசாளர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட்டால், கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கலாம் என்று இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்தவர்கள், வவுனியா மாவட்டத்தின் தமிழ் அரசு தலைமையிடம் எடுத்துரைத்தனர். இதற்கு மாவட்ட தமிழ் அரசுவின் தலைமையும் இணங்கிய நிலையில், நேற்றைய தினம் திடீரென கூட்டணியினர் அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
தாம் நடுநிலமை வகிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உறுப்பினர்களை அலைபேசிகளுடன் இருக்குமாறும் முடிவில் மாற்றம் என்றால் அறிவிப்போம் என்றும் கூட்டணியின் நகர சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலமையை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி, கூட்டமைப்பை ஆதரிக்காவிட்டால் வவுனியா நகர சபை பெரும்பான்மைக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாரை வார்க்கப்பட்டு விடும் என்று வவுனியா பொது அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அமர்வு இன்று மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தச் சபையிலும், தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரளாவிட்டால், சபை பெரும்பான்மைக் கட்சிகளிடம் செல்லும் நிலமையே காணப்படுகின்றது. இந்தச் சபையில், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன தலா 4 ஆசனங்களையும், கூட்டணியினர் 3 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா ஓர் ஆசனங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment