அமெரிக்கா . பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா மீது தாக்குதல் நடாத்திவருகின்றன சிரியா அரசு இரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் அரசு செய்தி முகமையான சனா தெரிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் அனுமதி வழங்கியுள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
“இரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வரும் சிரியாவில் மேற்கத்திய நாடுகளின் இந்தத் தாக்குதல் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ரசாயனத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.


Post a Comment
Post a Comment