காலத்தின் கண்ணாடி.. இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்




#IsmailUvaizurRahman#

உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்.

பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.
விருது :


ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் பத்திரிகையாளர் அல்லது அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு 'யுனெஸ்கோ'சார்பில் விருது வழங்கப்படுகிறது. இது 1997ல் உருவாக்கப்பட்டது. இது 'குல்லர்மோ கானோ இசாசா' என்ற கொலம்பிய பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது.

'எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலின் சட்டவிரோத கடத்தலை அம்பலப்படுத்தியதால், பத்திரிகை அலுவலகத்தின் வாயிலில், 1986ல் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது பணியை பாராட்டி, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

133
உலகில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை பற்றிய 2018ம் ஆண்டுக்கான தரவரிசையை, பிரான்சின் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டது. இதில் 180 நாடுகள் இடம்பெற்றன. இதில் முதல் இடத்தை நார்வே பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சுவீடன், மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இப்பட்டியலில் இந்தியா, 133வது இடத்தில் உள்ளது