Race For Education



(க.கிஷாந்தன்)

Race For Education  திட்டத்தில் 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வழிக்காட்டிய பாடசாலை ஆசிரியர்களையும், அதிபர்களையும் மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 22.05.2018 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மத்திய மகாணத்தின் தமிழ் மொழி மூல மாணவர்களின் க.பொ.த சாதாரண தரத்தில் கணித சித்தியை உயர்த்தும் நோக்கில் யாழ். இந்து கல்லூரியின் 1992ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் இந்த Race For Education  திட்டத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் பொன்னம்பலம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எ.சத்தியேந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Race For Education  திட்டத்தில் இவர்கள் “இந்துவிழி” எனும் கணித புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியதோடு, அதற்கான பயிற்சிகளையும் அப்பாடசாலையின் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு இலசமாக நடத்திருந்தனர்.

இந்நிகழ்வில் இச் செயற்திட்டத்தை மத்திய மாகாணத்திற்கு அறிமுகப்படுத்திய அட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் ஏ.சாந்தகுமார் உட்பட மாகாணத்தின் கோட்ட கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என அதிகளவானோர் கலந்து கொண்டனர்.



இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பிரதேச ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.