அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அர்ப்பணிப்பால், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி அதனை வெற்றிக்கொண்டோம் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டினோம் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் பிரச்சார செயலாளராக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று (01) நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், அலரிமாளிகையில் வைத்து மாலை வழங்கப்பட்டது.
நியமனக்கடிதத்தை வழங்கிவைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைமைக்கான தலைமுறையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், மிகவும் பெறுமதிவாய்ந்த பொறுப்பு, ஊடகமாகும்” என்றார்.
“அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே, அதற்கு தகுதிவாய்ந்த நபராவார்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment