அட்டன் பொலிஸ் நிலைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து




(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் அட்டன் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் தொழிற்சாலை முன்பாக இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் அட்டன் கிளை காரியாலய உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 07.06.2018 அன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அட்டன் டயகம பிரதான வீதி ஊடான பொது போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின.
ஆர்ப்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம், தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வீதியை மறித்து  கோஷமிட்டனர்.
குறித்த தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஒருவரை அதே தோட்டத்தில் வேலையற்ற ஒருவர் தாக்கியுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்யாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 04.06.2018 குறித்த தோட்டத்தில் வேலையற்ற நபர் ஒருவர் தோட்ட காணி யொன்றினை துப்பரவு செய்த போது அதனை அத்தோட்டத்தில் வேலை செய்யும் கலைச்செல்வன் என்ற வெளிகள உத்தியோகஸ்த்தர் தடுக்க முற்பட்டுள்ளார்.
இதன் போது இருவருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. குறித்த வெளிகள உத்தியோகஸ்த்தர் தாக்கப்பட்டதாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் 04.06.2018 மாலை முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைபாடு குறித்து கடந்த மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் இவர்கள் 07.06.2018 அன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பின் 07.06.2018 அன்று குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாமதித்தாவது கைது செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இனி பொலிஸார் அசமந்த போக்கில் இருக்க கூடாது என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டத்தையும் கைவிட்டனர்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,
வீதியில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தொடர்ந்து இரு சாராரும் பாதிப்புக்குள்ளாகியதாக தெரிவித்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் கைது செய்யவில்லை என்றும் அவர் வைத்தியசாலையிருந்து வீடு திரும்பிய உடனேயே அவர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியிருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.


பொலிஸார் இதன் போது தாமதமோ, எந்த ஒரு சாராருக்கும் சார்பாகவோ இருக்கவில்லை என்றும் மனித அபிமான அடிப்படையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு மேலும் தெரிவித்தது.