(க.கிஷாந்தன்)
இலங்கையில் பெருந்தோட்ட பகுதி மக்களின் லயன் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு இடர்கள் இடம்பெறாத வகையில் பாதுகாப்பான இடங்களில் தனி வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டியமைத்து வருகின்றது என இலங்கைக்கான கண்டி காரியாலய, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டு திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக 04.06.2018 அன்று இடம்பெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களுக்கு 14000 வீடுகளை கட்டியமைப்பதற்கு எமது இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் 4000 வீடுகளை வழங்கிய இந்திய அரசாங்கம் இப்போது 10000 வீடுகள் மேலதிகமாக வழங்கி 14000 வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் துரிதகதிப்படுத்தும் வகையில் மேலதிகமாக இன்னும் பல வீடுகளை தந்து உதவவும் இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் இந்திய வம்சாவளி மக்களின் வீடு பிரச்சினைகளை முற்றுமுழுதாக தீர்க முடியாது.
இன்று மடக்கும்புர தோட்ட மக்கள் 250 வீடுகளை பெற்றுக்கொள்வதில் சந்தோஷமடைகின்றனர். அந்த சந்தோஷத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம். இதேபோன்று ஏனைய இந்திய வம்சாவளி மக்களுக்கும் வீடுகளை அமைத்து கொடுத்து அவர்களையும் சந்தோஷம்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக தனது சிறிய உரையில் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment