எச்சரிக்கை - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று



நாட்டின் தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இதேவேளை, புத்தளத்தில் இருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. 

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்தில் இருந்து நீர்கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

(வளிமண்டளவியல் திணைக்களம்)