சேருவில பிரதேச செயலாளர் பிரிவில், தமிழ் மொழி மூல கிராம சேவையாளர்களை நியமிக்குக!



(அப்துல்சலாம் யாசீம் )

 திருகோணமலை சேறுவில பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி  "தமிழ் கிராம சேவையாளர்கள்" ளை நியமிக்குமாறு   மூதூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்தி தலைவர் எம்.சௌந்தர ராஜா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (20) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது திருகோணமலை மாவட்டத்தின் சேறுவில பிரதேச செயலகப்பிரிவில் நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் பூர்வீக கிராமங்கள் காணப்படுகின்றது.
இதில் இலிங்கபுரம்,தங்கநகர்,அரியமாங்கேணி,சிவபுரம்  ஆகிய கிராமங்கள் உள்ளடங்குகின்றன. இக்கிராமங்களுக்கு தமிழே சிறியளவு கூட பேசவும், தமிழில் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியாத பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனால் குறித்த பகுதிகளைச்சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பிரதேச மக்களின் நலன் கருதி  கடந்த ஆட்சி காலத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கும் இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் படி கடிதம் மூலம் தெரிவித்தும் உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும்  அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இவ்விடயம் குறித்து  நல்லாட்சி அரசு பாராமுகமமாக இருக்காமல் மக்கள் நலன் கருதி  சேறுவில பிரதேச மக்களின் நலன் கருதி தமிழ் பேசும் கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டுமென  அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.