அவலநிலை

(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிற்றுண்டி சாலை மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவதாகவும் மழை காலங்களில் ஒழுக்கு நீர் படிவதாகவும் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிகளவிலான நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற போதிலும் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை நம்பி வருகை தந்து உணவுப் பொருட்களை வாங்கிச் செல்வதாகவும், இதேவேளை சிற்றுண்டி சாலையில் தேனீரை அருந்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றுண்டி சாலை பார்ப்பதற்கும் அசிங்கமான முறையில் அசுத்தமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை சுற்றி  மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் கூரையிலிருந்து ஒழுக்குநீர் படிவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றுண்டி சாலையில் அசுத்த நிலை குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது தாங்கள் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஆறு தடவைகளுக்கும் மேலாக கடிதங்கள் கொடுத்தும் இன்னும் வைத்தியசாலை நிர்வாகம் அழகுபடுத்தி தரவில்லை என்றும் ஒரு நாளைக்கு வாடகையாக 5000 ரூபாய் பெறுவதாகவும் அவசரப்பட தேவையில்லை அதனை நிர்மாணித்து தருவதாகவும் புனரமைப்பு வேலைகளை செய்து தருவதாகவும் கூறி வருவதாக சிற்றுண்டி சாலையில் உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

 நோயாளர்களின் உறவினர்களும் புத்திஜீவிகளும், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் அசுத்தம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு  தெரியப்படுத்தியும் அவர்கள் வைத்தியசாலைக்குள் காணப்படுவதினால் சிற்றுண்டிசாலை  விடயத்தில்  கவனயீனமாக செயற்படுவதாகும் குறிப்பிடுகின்றனர்.

எனவே திருகோணமலை பொது வைத்தியசாலையில் காணப்படுகின்ற சிற்றுண்டிசாலையை பார்ப்பதற்கும் அழகாக காட்சிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் பொதுமக்களும், நோயாளர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.