உலகளாவிய முஸ்லிம் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம்



இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல் குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம் என  கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மீலாத் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “முழு உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அகிலம் போற்றும் உத்தம நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். 

இத் தருணத்தில் இந்நாட்டில் வாழும் அனைவருக்கும் எனது இதயங்களிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

உத்தம இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாம் வேதம் ஆக்கச் செயற்பாடுகளுக்கு மிகத் தெளிவான செயலூக்கம் கொடுக்கும் வகையிலேயே இந்த அகிலத்திற்கு வழிகாட்டுகின்றது. 

அதன் மூலம் அனைத்து மனித குலத்தையும் ஒருங்கிணைத்து, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளுடன் சுமூகமான வாழ்க்கை முறையொன்றை நிலை நிறுத்துவதே எம் பெருமானார் போதிக்கும் சன்மார்க்கத்தின் அடிப்படையான விடயமாகும். 

எந்த சந்தர்ப்பத்திலும் அழிவுச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றும் எவரும் எந்த வகையிலும் பங்குதாரர்களாவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனவே, அதன் அடிப்படையில் முன்மாதிரியான ஓர் மிகச் சிறந்த சமூகமாக இந்த நாட்டில் வாழ்வதோடு எமது தாய் நாட்டை உலகிலேயே சிறந்த தேசமாகக் கட்டியெழுப்ப இப்புனித நாளில் நாம் அனைவரும் திடசங்கட்பம் பூணுவோம். 

அதேபோன்று எமது நாட்டில் மட்டுமன்றி, முழு உலகிலும் இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ளக் கூடிய வகையில் அல்குர்ஆன் போதிக்கின்ற நெறிமுறைகளையும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் விழிகாட்டல்களையும் முழுமையாகப் பின்பற்றி உலகளாவிய முஸ்லிம் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வருவோம். 

மேலும் இத்தருணத்தில் எல்லாம் வல்ல இறைவனின் அருளும், அன்பும் அனைவர் மீதும் உண்டாவதற்கு பிரார்த்திக்கின்றேன் என அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.