இலங்கை நாடாளுமன்றமே! விடியும் வரை காத்திரு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்துக்குப் பாராட்டு
பல நாள்களாக நிலவிய அரசியல் உறுதியற்ற நிலைக்குப் பிறகு தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையை தேவையான அவசரத்துடனும், விரிவாகவும் அணுகி, நிலைமைக்கேற்ப செயல்பட்ட நீதித்துறை குறித்து தற்போது பொதுமக்கள் பெருமை கொள்ளலாம் என்று கரு ஜெயசூர்ய தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமாக செல்லத்தக்கதா என்பதைப் பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவெடுப்பதற்கு தற்போது நாடாளுமன்றம் வழிவகை செய்யவேண்டும் என்றும் கரு.ஜெயசூர்ய குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய நாளின் நிகழ்வுகள் குறித்து மக்கள் ஆறுதல் கொள்ளலாம் என்று கூறிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான தமது நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பொதுமக்களும், குறிப்பாக பொறுப்புள்ள பதவிகளில் உள்ளவர்களும் தேவையற்ற தூண்டுதல்களையும், நிச்சயமற்ற தன்மையையும் தவிர்க்கும் பொருட்டு அமைதியாகவும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லா இலங்கையர்களும், நீதிமன்றத்தின், நாடாளுமன்றத்தின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ தரப்பு என்ன நினைக்கறது?
ராஜபக்ஷ ஆதரவு எம்.பி.க்கள் நடத்திய செய்தியாளர் கூட்டம்.
Image captionராஜபக்ஷ ஆதரவு எம்.பி.க்கள் நடத்திய செய்தியாளர் கூட்டம்.
இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புவில் நடந்த ராஜபக்ஷ ஆதரவு செய்தியாளர் கூட்டத்தில், விமல் வீரவன்ச உள்பட 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சபாநாயகரின் வேண்டுகோளைப் நிராகரிப்பதாகத் தெரிவித்தனர்.
''நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல. அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனைவரும் பொறுமை காக்க வேண்டும். இடைக்கால தடை உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பதவியிழந்த எம்.பிக்களுக்கு அந்தப் பதவிகள் கிடைக்காது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் எம்.பி.க்கள் பதவி பெறுவார்கள். ஒருவேளை, ஜனாதிபதி அறிவிப்பு சரியானது என நீதிமன்றம் டிசம்பர் 07ஆம் தேதி அறிவித்தால் என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும். ஆகவே, நாடாளுமன்றத்தைக் கூட்ட சட்டரீதியாக எவ்வித அதிகாரமும் இல்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டும் முயற்சியை நாம் கண்டிக்கிறோம். புறக்கணிக்கிறோம்,'' என அவர்கள் அறிவித்தனர்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்ஷ தாங்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


Advertisement