மாணவியரின் பர்தாவைக் கழற்ற முற்பட்டோருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு


அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், தனியார் வகுப்பு முடிந்து சென்ற மாணவியைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த, இரண்டு சந்தேக நபர்களையும்,தொடர்ந்தும் எப்ரல் மாதம் இரண்டாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி, பெருமாள் சிவகுமார் கட்டளை பிறப்பித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளிலில் சென்று, மாணவி ஒருவரின் பர்தாவை (தலை முக்காட்டைக்) கழற்ற முற்பட்ட அக்கரைப்பற்று -01 இனைச் சேர்ந்த, பிரதான சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறும் இன்று அக்கரைப்பற்று நீதிபதி கட்டளை பிறப்பித்ததுடன் இரண்டாம், மூன்றாம் சந்தேக நபர்கள் சிற்றகவையர்களாகக் காணப்படுவதால், அவர்களை எச்சரித்ததுடன், சிறுவர் நன்னடத்தை அதிகாரியினைக் கண்காணிக்குமாறும், இவர்கள் பற்றிய மேலதிக  அறிக்கையை எதிர்வரும்  தினங்களில் சமர்ப்பிக்குமாறும் அக்கரைப்பற்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பாடசாலை முடிவடையும் அல்லது தனியார் வகுப்புக்கள் முடிவடையும் நேரங்களில், மாணவ மணிகளைத் தொல்லைக்குட்படுத்தும், நபர்களை, கண்காணிக்சுவும் அவர்களை சட்டத்தின் முன்கொண்டு வருவதற்காவும் பொலிஸ் அதிகாரிகளைக் உரிய நேரங்களில் ரோந்துக் கடமையில் ஈடுபடுத்துமாறும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


கல்வி கற்கும் மாணவர்களை இம்சைப் படுத்துவதற்கு எதிராகவும்,பாலியல் சேட்டைகள் செய்வதற்கு எதிராகவும் சமுதாய நலன் கருதி,தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, அக்கரைப்பற்று  சட்டத்தரணிகள்  தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும், அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் இன்றைய தினம் பொலிசாருக்குத் தெரிவித்தார்.