அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் (Counter Terrorism Bill) மக்களின் சுதந்திரத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் ஒரு மோசமான சட்டமூலமாகவே காணப்படுகிறது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் மக்களால் கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலையே நாட்டில் தோன்றும். மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் தன்னைத் தெரிவு செய்த மக்களையே அடக்கியாளும் ஒரு பயங்கரமான சூழ்நிலையே இந்த சட்டத்தின் மூலம் உருவாகும்.
இந்த சட்ட மூலத்தை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரதும் தார்மீகக் கடமையாகும். அந்த வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட மூலத்தின் உள்ளடக்கம் அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்று (14.3.2019) கொழும்பில் இடம் பெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல் மற்றும் உரிமைகளுக்கான சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG), முஸ்லிம் கவுன்சில், இலங்கை சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் என்பன இணைந்தே இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. தொடர்ந்தும் இது சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முன்கொண்டு செல்லவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.


Post a Comment
Post a Comment