புதிய சிறுநீரக பிரிவு,வெள்ளவாயவில்


மொனராகலை மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கும் 36 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் குருதி மாற்று சிகிச்சை பிரிவு நேற்று (06) நண்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. 

இலங்கையில் சிறுநீரக நோய் அச்சுறுத்தல்கள் காணப்படும் 11 மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் உள்ளடங்குகின்றது. மாவட்டத்தின் 04 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 1500 சிறுநீரக நோயாளிகள் இணங் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் “நாட்டக்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 

மேலும் 23 மில்லியன் ரூபா செலவில் 47500 குடும்பங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான 190,000 லீட்டர் சுத்தமான நீரை பெறக்கூடிய வகையில் 19 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை ஸ்தாபிப்பதல், குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசி வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குதல், அச்சுறுத்தல் வலயங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 2250 குடும்பங்களுக்கு புதிய நீர்ப் பம்பிகளை வழங்குதல், சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 

இன்று நண்பகல் வெள்ளவாய தள வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி, நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் குருதி மாற்று சிகிச்சை பிரிவை மக்களிடம் கையளித்தார். 

அத்துடன் இணைந்ததாக வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார். 

மேலும் சிறுநீரக நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று நோயாளர்கைள பதிவு செய்யும் நிகழ்வும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது. 

சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்காக உதவிகளை வழங்கும் செயற்திட்டமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, மொனராகலை மாவட்ட செயலாளர் பத்மகுலசூரிய, ஊவா மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிறி, வெள்ளவாய தள வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் என்.ஏ.எம்.ரணதேவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மொனராகலை பொது வைத்தியசாலைக்கு 100 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் நேற்று (06) இடம்பெற்றது. 

ஜனாதிபதி நிதியத்தின் 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் அந்த உபகரணங்கள் மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.டி.ரத்னாயக்கவிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது. 

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் டி.என்.நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)