தமிழகத்தில் தணியாத தாகம்


ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும்.
சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் காலை 11.35 மணியளவில் சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இந்த ரயிலில் மொத்தம் ஐம்பது வேகன்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரைவிட அதிக தண்ணீரை நிரப்ப முடியும் என்றாலும் ஒவ்வொன்றிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதன்படி இன்று வந்து சேர்ந்த ரயிலில் 2.5 லட்சம் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.
தண்ணீர் ரயில்
குடிநீரை ஏற்றிவந்த இந்த ரயில் வில்லிவாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் இந்த நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஜோலார்பேட்டையில் தண்ணீரை நிரப்ப 50 குதிரை சக்தியுள்ள மூன்று மோட்டர்கள் இயங்கிவருகின்றன. இந்த மோட்டர்கள் மூலம் 50 வேகன்களினலும் தண்ணீர் நிரப்ப மூன்று முதல் நான்கு மணி நேரமும் சென்னையில் தண்ணீரை இறக்க 2-3 மணி நேரமும் ஆகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜோலார்பேட்டை - சென்னை இடையிலான 200 கி.மீ. தூரத்தை இந்த ரயில் 4 மணி நேரத்தில் கடக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு தடவை நீரை நிரப்பி, சென்னையில் சேர்க்க 10 மணி நேரம்வரை ஆகிறது. ஆகவே ஒரு ரயில் மூலம் ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீரை கொண்டுவர முடியும்.
தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் இதுபோல இரண்டு ரயில்கள் ஒதுக்கீடு செய்திருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் இயங்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் கொண்டுவர முடியும்.
வாட்டர் டாங்க்படத்தின் காப்புரிமைPRADEEP KUMAR
இந்தக் குடிநீர் திட்டத்திற்கென தமிழக அரசு 66 கோடி ரூபாயை முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதன் மூலம் வேலூருக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் நீர் இங்கே கொண்டுவரப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம் 21ஆம் தேதி துவங்கின. முதலில் சோதனை ஓட்டத்தின்போது, குழாய்கள் உடைந்தன. பிறகு அதனைச் சரிசெய்து மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு வெள்ளிக்கிழமை அதிகாலை 50 வேகன்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்த ரயில் காலை 11.35 மணியளவிலேயே சென்னைக்கு வந்தடைந்துவிட்டது. இருந்தபோதும் அமைச்சர்கள் இதனை வரவேற்கும் நிகழ்வு பிற்பகல் 2.30 மணிக்குத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதால், அந்த ரயில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் வந்த பிறகு மீண்டும் ரயில் வில்லிவாக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அமைச்சர்கள் தண்ணீரை ரயிலிலிருந்து திறந்துவிட்டனர்.
தண்ணீர்படத்தின் காப்புரிமைRADEEP KUMAR
சென்னையின் ஒரு நாள் குடிநீர் தேவை 850 மில்லியன் லிட்டர்கள். குடிநீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலகட்டத்தில் தினமும் 450 முதல் 500 மில்லியன் லிட்டர் நீரை விநியோகம் செய்கிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் முழுமையாக வறண்டுவிட்ட நிலையில், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்பட்டும் தண்ணீர் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகத்தை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டிருக்கிறது.
சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் இதிலிருந்து கிடைக்கும். ஆனால், இதற்கான ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் (ஒரு லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் வரை) கடல்நீரை குடிநீராக்குவதைவிட (ஒரு லிட்டருக்கு 60 முதல் 70 காசுகள்) அதிக செலவு பிடிக்கும் திட்டம் இது. இருந்தபோதும் தற்போதைய நெருக்கடி நிலையின் காரணமாக இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை துவங்கி தண்ணீர் விநியோகம் சீரடையும்வரை ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவருவது தொடருமென மாநில அரசு தெரிவித்திருக்கிறது.