Captain Cool #கேன் வில்லியம்சன்: "கோபம் இல்லை, ஆனால் வருத்தமாக இருக்கிறது"


"நாங்களும் சரி இங்கிலாந்தும் சரி முடிந்த அளவிற்கு விளையாடினோம். ஆனால், அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று தெரியவில்லை. பவுண்டரிகளால் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு அணிதான் வெற்றி பெற முடியும். அது நாங்கள் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் மிக சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதி பெற்றவர்கள்" என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
இங்கிலாந்து வெற்றியை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கேன் வில்லியம்சன், "இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வர கடினமாக உழைத்துள்ளோம். இதில் ஒருவர்தான் வெற்றி பெற முடியும். ஆனால், அது நாங்கள் இல்லை என்று நினைக்கும்போது, அதனை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கிறது. இதற்கான விதிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது" என்றார்.
இறுதியில் நீங்கள் எல்லாம் கிரிக்கெட்டை ரசித்தீர்கள் என்று நினைக்கிறேன். இந்தத் தோல்வி குறித்து இனிதான் பேச உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
"தோல்வி அடைந்ததில் கோபம் ஏதுமில்லை. வருத்தமாக உள்ளது என்று சொல்வேன். எங்கள் அணியில் வருத்தம்தான் அதிகம் தெரிகிறது. கடினமாக உழைத்துள்ளோம். ஆனால், சில நேரங்களில் நமக்கு ஏற்றவாறு எதுவும் நடக்காது. என் அணியினர் சிறப்பாக அதனை கையாள்கிறார்கள்."
"விதிமுறைகள் ஏற்கனவே இருப்பதுதான். நாங்கள் ஒரு பவுண்டரி அதிகமாக அடித்திருக்கலாம். பவுண்டரிக்கள் கணக்கெடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை."
அடுத்த மிஸ்டர் கேப்டன் கூலா கேன் வில்லியம்சன்?
நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாகவும் அந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது அணியை சிறப்பாக வழிநடத்தியதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
எந்த நேரத்திலும் பதற்றப்படாமல் கூலாக இருப்பார் என மிஸ்டர் கேப்டன் கூல் என்று பலராலும் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஆனால் தற்போது நேற்றைய தோல்வியை அடுத்து, அதனை கேன் வில்லியம்சன் எடுத்துக் கொண்ட விதத்தை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், தோனியோடு இவரை ஒப்பிட்டு வருகிறார்கள்.