பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் நாட்டில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து டெல்லி ராஜ்காட் பகுதியில் சத்தியாகிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், அஹ்மத் பட்டேல், கமல்நாத், திக் விஜய் சிங், ஏ.கே. அந்தோணி, மீராகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் என ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் நாட்டில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாம் ஒன்றிணைந்து இந்தியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக போராட்டம் தொடங்கியது
"ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்" என அழைக்கப்படும் இந்த அமைதி போராட்டத்தில், அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையை சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி வாசித்தனர்.
இந்த போராட்டத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலியும் அனுசரிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சோனியா காந்தி ஒரு மணி நேரம் மட்டுமே கலந்து கொண்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியான மக்களின் பேரில் உறுதியேற்ற பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி அரசமைப்பு சட்டத்தைக் காக்கும் என்றார்.
இந்த போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இன்று நாம் அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையை படித்தோம். அது நம்முடைய குரல் மட்டுமல்ல, இந்த நாட்டின் குரல். அந்த குரல்தான் அன்பால், அமைதியால் பிரிட்டிஷ் அரசை நாட்டை விட்டு வெளியேற்றியது. அந்த குரல்தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. அந்த குரல்கள் இல்லாமல் இந்தியா இல்லை" என்றார்.
மேலும் அவர், "இந்த நாட்டின் எதிரிகள் அந்த குரலை முடக்க முயல்கிறார்கள். இந்த நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரத்தை அழிக்க பார்க்கிறார்கள்" என்றார்.
"இந்த குரல்கள் காங்கிரசின் குரல் அல்ல. பாரத மாதாவின் குரல். பாரதமாதாவின் குரலை நீங்க ஒடுக்கப் பார்த்தால், அவர் உங்களுக்கு உரியப் பதிலைத் தருவார்," என்று பேசினார்.
மேலும் அவர், "ஆடைகளால் அடையாளம் காணலாம் என்றீர்கள். ஆம், நாங்கள் உங்கள் ஆடையால்தான் அடையாளம் காண்கிறோம். இந்திய மக்கள் இரண்டு கோடி மதிப்பிலான ஆடை அணியவில்லை. நீங்கள்தான் அணிந்தீர்கள்." என்றார் ராகுல்.
"வெறுப்பின் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள் மோதி. இளைஞர்களிடம் கூறுங்கள் ஏன் உங்களால் வேலை அளிக்க முடியவில்லை என? பொருளாதாரத்தை நாசமாக்கிய காரணத்தை சிறு வணிகர்களிடம் கூறுங்கள்," என்றார்.
மோதியால் இந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. மோதி வெறுப்பை வளர்ப்பார். நாட்டை பிரிப்பார். அவரது அமைப்பு அவருக்கு அதனை மட்டும்தான் கற்றுத் தந்துள்ளது," என்றார்.