’நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்’:

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா.
44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.
`` தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.`` என அந்த இணையதள பதிவில் மசாவா தெரிவித்துள்ளார்.
``எனக்கான மனைவியை கண்டுபிடிக்க விரும்புகிறேன். என்னுடைய எதிர்கால மனைவியுடன், என்னுடைய காதலையும், உலக அமைதியையும் விண்வெளியிலிருந்து உரக்கச் சொல்ல விரும்புகிறேன்.`` என அவர் கூறியுள்ளார்.
இந்த சுயம்வரத்திற்கு விண்ணப்பிக்க பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் பெண் திருமண பந்தத்தில் இல்லாதவராக இருக்க வேண்டும், 20 வயதை கடந்தவராக இருக்க வேண்டும், எப்போதும் நேர்மறை எண்ணத்தை கொண்டிருப்பவராகவும், விண்வெளிக்கு செல்லும் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜனவரி 17ஆம் தேதி எனவும், சுயம்வரத்தின் இறுதி முடிவு மார்ச் இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல உள்ள முதல் நபர் மசாவா.படத்தின் காப்புரிமைSPACEX
Image captionதனியார் நிறுவனம் மூலம் நிலவுக்கு செல்ல உள்ள முதல் நபர் மசாவா.
இந்த மாத தொடக்கத்தில் தனது ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்த 100 பேருக்கு, லட்சக்கணக்கில் பணத்தை பரிசாக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திருந்தார் மசாவா.
சோசோ என்ற இணைய ஆடை விற்பனையகத்தை நடத்தி வரும் மசாவாவின் சொத்து மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நம்பப்படுகிறது. இதில் பெரும்பாலான பணத்தை அவர் கலைகளுக்காக செலவிட்டு வருகிறார்.


Advertisement