கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் ஆறாக (குணமடைந்த சீனப் பெண்ணுடன் சேர்த்து) அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் 103 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு இன்று (14/03/2020) தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனத் தெரிய வந்துள்ளது
மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவரும், வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட ஒருவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறெனினும், வைத்திய பரிசோதனைகளில் குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நான்கு சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கொடை, தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றுலாப்பயணிகள் புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதை அடுத்த, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்கள் வைத்திய பரிசோதனைக்காக தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய எட்டு குடும்ப அங்கத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
கலாச்சார விவகார அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகள், மற்றும் புகையிரதங்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிலர புதிய வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை பேருந்து தரிப்பிடங்களுக்கு வரும் பயணிகளுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளது.
நிர்ணய விலையில் முகக் கவசங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்இ பாடசாலைகள், பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை வீடுகளில் இருந்து இணையத்தளத்தினூடாக மேற்கொள்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்கள் பீதியடையாத வண்ணம் செயற்படுவது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சு அறிவித்துள்ளது.
தேவையான எரிபொருள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும், எவ்வித தட்டுப்பாடுமின்றி நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அடுத்த 8 மாத காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக, அத்தியாவசிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அரிசி விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லையென நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
எந்தவித அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை ஸ்ரீலங்காவின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


Post a Comment
Post a Comment