தமிழ் தேசத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்



தமிழ் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்குச் சென்றவர்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசத்திற்கு வரப்போதும் ஆபத்துக்கள் தொடர்பாக முன்கூட்டியே சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமிழ் தேசத்திற்கான ஆபத்துக்கள் தொடர்பாக நாங்கள் கூறிவந்த அத்தனை கருத்துக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளோம். எம்மை பொறுத்தவரையில் புதிய தலைமைத்துவம் தமிழ் தேசத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
அதை கடந்த 10 வருடங்களாக சொல்லிவந்தோம். இதனை இன்று மக்களும் தாங்களாகவே அனுபவ ரீதியான முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு வந்துள்ளார்கள்.
அந்த புதிய தலைமைத்துவத்தை நேர்மையாகவும் கொள்கை ரீதியாக இறுக்கமாகவும் தூய்மையாகவும் வழங்குவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராகவுள்ளது” என மேலும் தெரிவித்தார்.