வளைகுடா நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம், எண்ணெய் வளம் அதிகமுள்ள வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை செய்து வருவதால், அந்த நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி உள்ளது? என்பதை அறிந்து கொள்ள மக்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் பெரும்பாலான வளைகுடா நாடுகள், தேசிய அளவிலான ஊடரங்கை பிறப்பிக்கவில்லை என்றாலும் பகுதி நேரமாக குறிப்பாக இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருவது, உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்துள்ளது ஆகியவற்றினால் அடுத்து வரும் மாதங்களில் பொருளாதார ரீதியான தாக்கத்தை வளைகுடா நாடுகள் சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக 102 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 570-ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.மேலும் நேற்றைய நாளில் மூவர் குணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்; இருவர் இந்தியர்கள். தற்போது வரை அமீரகத்தில் 58 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இந்த 102 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த 102 பேரில் 30 பேர் இந்தியர்கள்.
கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு 2,20,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது அந்நாட்டில் 10 லட்சம் மக்களில் 22,900 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த விகிதம் உலகத்திலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். மேலும் வரும் நாட்களில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.
Banner
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமீரகத்தில் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நேரத்தின் போதும், ஊரடங்கு நேரம் அல்லாத போதும் அத்தியாவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு தழுவிய சுத்தப்படுத்தும் பணிகள் அங்குத் தினந்தோறும் மாலை 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை தொடரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பதற்றத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதாக அமீரக மத்திய வங்கி எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்களுடைய வங்கி தொடர்பான எந்த தகவல்களையும் தாங்கள் கேட்பதில்லை எனவும் இது தொடர்பாக வரும் மின்னஞ்சல்களுக்கோ தொலைப்பேசி அழைப்புகளுக்கோ பதிலளிக்க வேண்டாம் எனவும் அமீரக மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா காரணமாகப் பொருளாதார ரீதியான தாக்கத்தைச் சந்தித்து வரும் துபாய், அதனை மீட்டெடுப்பதற்காக சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. இவற்றில் ஆறு மாத வாடகை தள்ளுபடி, அபராத தள்ளுபடி மற்றும் இந்த ஆண்டு இறுதி வரை தற்காலிக வேலை பர்மிட்களுக்கு அனுமதி அளிப்பது ஆகியவை அடக்கம்.

செளதி அரேபியா

வளைகுடா நாடுகளில் இரானுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக செளதி அரேபியா இருக்கிறது. அந்த நாட்டில் மட்டும் சுமார் 1300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தரவுகளின்படி, அங்கு ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 68 பேருக்கு உள்ளூர் பரவல் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 27 பேர் ரியாத்தையும், 23 பேர் தம்மாம்மையும், 14 பேர் மதினாவையும், 7 பேர் மெக்காவையும் சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக அந்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து வகையான உள்ளூர் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரியாத், ஜெட்டா மற்றும் மெக்கா ஆகிய நகரங்களுக்குள் நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் மாலை மாலை 3 மணி முதல் யாருக்கும் அனுமதியில்லை. முன்னதாக கட்டுப்பாடு மாலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
கொரோனா தொற்று பரிசோதனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

குவைத்

தற்போது வரை குவைத்தில் 255 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 72 பேர் குணமடைந்துள்ளதாகவும், 1,231 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குவைத் சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
செளதி அரேபியாவை போல குவைத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பிற்காகப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குவைத்திற்கு வரும், குவைத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் அந்நாடு தடை விதித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும் தினந்தோறும் மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற நேரங்களில் குவைத்வாசிகளும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தேவையில்லாமல் பொது இடங்களில் சுற்றி வருவதால், கண்காணிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என குவைத் அரசு முடிவெடுத்திருப்பதாக அராப் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குவைத்திலுள்ள வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களிடம் வாடகை கேட்டு அழுத்தம் தரக்கூடாது என அந்நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் புரோக்கர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக மோசமான பொருளாதார சூழல் நிலவுவதால், கடன்களுக்கான மாத தவணை செலுத்தும் காலத்தை அடுத்த மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு வங்கிகள் ஒத்தி வைத்துள்ள சூழலில், வீட்டு உரிமையாளர்களும் இதே போன்ற முடிவை எடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பஹ்ரைன்

பஹ்ரைனை பொறுத்தவரைக் கடந்த கடந்த மார்ச் 29-ஆம் தேதி கிடைத்த தரவுகளின்படி, தற்போது 224 பேருக்கு கொரோனா வைரஸுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நால்வர் இதுவரை கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 272 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோராயமாக சிலருக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியுள்ள முகாம்களில், ஒரு அறையில் ஐந்து பேருக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தங்குமிடங்களில் ஒருவருக்கு ஒருவர் இடையே குறைந்தபட்சம் மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐந்து பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது என பஹ்ரைனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 5000 பஹ்ரைன் தினார்கள் அபராதமோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும்.

ஓமன்

ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் - சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிந்துள்ளனர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 167-ஆக உயர்ந்துள்ளது. 23 பேர் குணமடைந்துள்ளனர்.
அங்கு அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்து வகையான பத்திரிக்கைகள் வெளியாவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிக்கிக் கொண்டுள்ள ஓமன் குடிமக்களைத் திருப்பி அழைத்து வர சிறப்பு விமானத்தை ஓமன் அரசு அனுப்பவுள்ளது. இது தொடர்பாக இந்தியா அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஓமனின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான Petroleum development Omen நிறுவனம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தக்காரர்களுடன் ஆலோசிக்கத் துவங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

கத்தார்

கத்தார் கடந்த சனிக்கிழமை தனது முதல் கொரோனா உயிரிழப்பைப் பதிவு செய்தது. உயிரிழந்த நபர் கத்தாரில் பணியாற்றி வந்த வங்காளதேச நபராவார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அங்கு 44 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளில் கத்தார் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமானங்களை இயக்கி வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தாங்கள் கூடிய விரைவில் நிதிச்சுமையில் சிக்க நேரிடலாம் எனவும் அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. தற்போது கத்தார் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த விமானங்களின் இருக்கைகளை முழுவதும் நிரப்ப வாய்ப்பில்லை என்பதால் அதன் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது.


Advertisement