உலக சாம்பியன்ஷிப்புக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடர் தள்ளிப்போகலாம் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இடையிலான தொடர் நடக்குமா? என்பது சந்தேகம். டிசம்பர் - ஜனவரியில் (2021) ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதனால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தொடர்கள் ரத்து செய்யப்பட்டால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு பெரும்பாலான அணிக்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான காலக்கட்டத்தை நீட்டித்து தள்ளிவைக்கப்பட்டுள்ள தொடர்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரும், பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் மீண்டும் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டால் அனைத்து அணிகளுக்கும் சாம்பியன்ஷிப்பில் இணையான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சி செய்யும் வகையில் அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். 2021 இறுதி வரை தொடரை நீட்டிக்க முடியும்.

தொடர் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய பார்வை. இது ஒன்றுதான் தொடரை பேலன்ஸ் ஆக வைக்க ஒரே வழி. தொடர் நீட்டிக்கப்பட்டால் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க முடியும்’’ என்றார்.