ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக


(க.கிஷாந்தன்)

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை அட்டன் பொலிஸார் நேற்றும் (26.04.2020) இன்றும் (27.04.2020) முன்னெடுத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் இலகுப்படுத்தப்பட்டது.

இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களைத்தவிர ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 15 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (24.04.2020) இரவு 8 மணி முதல் நாளை 27 காலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்படி அட்டன் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் வீதிகளில் நடமாடியவர்களையும், வாகனங்களை செலுத்தியவர்களையும் அட்டன் போக்குவரத்து பொலிஸார் கைது செய்தனர். மேலும் சிலர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஊரடங்குவேளையில் பயணிக்ககூடிய அனுமதி பத்திரமின்றி அட்டன் நகரில் வாகனம் செலுத்திய ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆட்டோ ஓட்டிய சிலரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டனர்.