இர்பான் கானின் மறைவுக்கு பிரபலங்கள் அனுதாபம்



இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இர்ஃபான் கான் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
திரைப்பட நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "மிக சீக்கிரமாக சென்றுவிட்டீர்களே இர்ஃபான் ஜி. உங்களுடைய நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த சில சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீண்ட காலம் நீங்கள் இருப்பீர்கள் என்று விரும்பினேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இர்ஃபான் கான் நம்பமுடியாத திறமை கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன், அவரது மறைவு செய்தி மிகவும் சோகம் அளிப்பதாகவும் உலக சினிமாவில் அவருடைய பங்களிப்பு மிகவும் பெரிது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான இம்ரானின் மறைவு செய்தி வருத்தமளிப்பதாகவும், அவருடைய குடும்பத்திற்கு இந்தக் கடினமான நேரத்தில் கடவுள் பலம் கொடுக்கட்டும் எனவும் நடிகர் அக்‌ஷய் குமார் பதிவிட்டிருக்கிறார்.
"இர்ஃபான் கான் காலமான செய்தி வருத்தமாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் நடித்துள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இறுதியாக நான் பார்த்த திரைப்படம் ஆங்ரேஸி மீடியம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நடிகை திரிஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும், அவருடைய கடின உழைப்பையும், கண்ணியம் மற்றும் திறமையையும் பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
திறமையுள்ள ஒரு அற்புதமான நடிகரை இழந்துவிட்டோம். அவர் என்னிடம் பேசிய அன்பான வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.