அம்பாரையில், காற்றும் மழையும் கவிபாடியது

(பாறுக் ஷிஹான்)


அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அம்பாறை நகரப்பகுதி    காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை , சவளைக்கடை ,மத்திய முகாம் போன்ற பகுதிகளில்  வீசிய சுழல் காற்றுக் காரணமாக வீதிகளில் அதிகளவிலான தூசு மண் வீசப்பட்டன. இதனால் பயணிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகினர்.  சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.

சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மழை நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது.தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு    பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மாலை வேளையில் கடும் காற்றுடன்  மழையும் பெய்து வருகின்றது.இதனால் தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதோடு, மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Advertisement