இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்


வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு.

இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது.

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே.

அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை கடந்த இரண்டு மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறது அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை.

ஒரு புறம் பெருக்கெடுக்கும் வருடாந்திர வெள்ளம், மறுபுறம் மண் சரிவு, இன்னொரு பக்கத்தில் தற்போது பெருகிவரும் கொரோனா தொற்று என்று முப்புறமும் பேரிடர்கள் சூழ்ந்து தாக்கும் நிலையில், இடி மின்னலை முன் கணிப்பதற்கான இந்த தொழில்நுட்பம் அந்த மாநிலத்துக்கு ஒரு சிறு ஆசுவாசத்தை வழங்குகிறது.

அசாம் மாநில உள்துறை செயலாளரும், அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான மு.ச.மணிவண்ணன் இந்த தொழில்நுட்பம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

மு.ச.மணிவண்ணன்
Image captionமு.ச.மணிவண்ணன்

"அமெரிக்க நிறுவனமான எர்த் டாட் நெட் இந்த தொழில்நுட்பத்தை எங்களுக்கு வழங்குகிறது. ஏற்கெனவே ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும்" என்கிறார் மணிவண்ணன்.

"இடி மின்னலின் பாதையை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறோம். அதே நேரம் அசாம் மாநிலத்தில் எங்கேயாவது இடி தாக்கும் என்றால் அது குறித்து 45 நிமிடம் முன்பே கணித்துவிடும் அமெரிக்க நிறுவனம் அது குறித்து, அந்த ஊர் எந்த வட்டத்தில் வருகிறதோ அந்த வட்டாட்சியருக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பிவிடும். உடனடியாக வட்டாட்சியர் அதைப் பற்றி குறிப்பிட்ட ஊருக்கு அழைத்து எச்சரிக்கை விடுப்பார் என்று கூறும் மணிவண்ணன், இதற்காக வட்டவாரியாக உள்ளூர் அதிகாரிகளின் எண்கள் எர்த் டாட் நெட்டிடம் பகிரப்பட்டுள்ளன என்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல், அதாவது கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக கூறும் அவர், இதுவரை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாக இருந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

"கடந்த ஆண்டு அசாமில் இடி மின்னல் தாக்கில் 42 பேர் இறந்துள்ளார்கள். இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்த கிராமத்தில் இடி தாக்கப் போகிறது என்று 45 நிமிடம் முன்பாகவே செய்யப்பட்ட கணிப்புகள் துல்லியமாகவே இருந்துள்ளன. ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. இதற்காக, ஊராட்சிகளுக்கு ஒலி பெருக்கிகளைத் தந்து அதன் மூலம் அறிவிப்பு செய்யலாமா என்பது போன்ற யோசனைகள் இருக்கின்றன" என்றார் மணிவண்ணன்.

உயிர் காக்கும் தொழில்நுட்பம்

இதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கிறதா என்று கேட்டபோது, வெறும் இரண்டு மாதம் முன்பிருந்துதான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்துபார்த்தால், கடந்த ஆண்டை ஒப்பிட எவ்வளவுதூரம் இடி மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்பது தெரியவரும். அப்படி ஒரு ஆய்வை செய்ய சிறிது காலம் பிடிக்கும் என்கிறார் மணிவண்ணன்.

"மகவு பிறப்பதும், மழை வருவதும் எப்போது நடக்கும் என்று யாரும் சொல்ல முடியாது" என்று கூறும் பழமொழி ஒன்று தமிழில் உண்டு.

ஆனால், புயல், மழை போன்றவற்றை கணிக்கும் தொழில்நுட்பத்தில் பெருத்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதன் மூலம் புயல் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.

சுனாமியை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் ஏற்பாடுகள் வந்துவிட்டன. நிலநடுக்கத்தை முன் கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்துவந்தாலும் ஒரு நிமிடத்துக்கு முன்பு அதைக் கணிப்பதுகூட இன்னும் சவாலானதாகவே இருக்கிறது.

இந்நிலையில் இடி மின்னல் என்னும் ஓர் இயற்கை இடர்ப்பாட்டை முன் கணிக்கும் தொழில்நுட்பம் மனித உயிரிழப்புகளை தவிர்ப்பதில் உதவி செய்யக்கூடும்.

தமிழகத்திலும் ஆண்டுதோறும் இடிமின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் நிலையில், இந்த தொழில்நுட்பம் தமிழ்நாட்டுக்கும் எதிர்காலத்தில் உதவி செய்யக்கூடும்.