"வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவில்லை"


 
வி.சுகிர்தகுமார் 


  முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அம்பாரை மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு குறுகிய காலத்தினுள் அதிகளவான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தவர். ஆகவே சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டியது தலையாய கடமை என கட்சியின் மயில் சின்னத்தில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மௌவி தெரிவித்தார்.

இன்று (22) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பாக அக்கரைப்பற்றில் வாழும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு றிசாட் பதியுதீன் அவர்கள் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்தவர். வெளிச்சமில்லாத பகுதிகளுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுத்தவர். வாழ்வாதாரம் அற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியவர் என்றார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இரு வாக்குறுதிகளை அவர் மீறியுள்ளதாகவும் கூறினார். ஒன்று இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு. இரண்டு நாட்டில் வாழும் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் பேகர் என பிரிவுபடாது இலங்கையர்கள் எனும் ரீதியில் ஒற்றுமைப்படவேண்டும். அதன் மூலம் இந்த நாடு முன்னேற வேண்டும் என்பதாகும்.

ஆனால் அவர் அரசாங்கத்தை அமைக்கின்றபோது ஒரு முஸ்லிம் பிரதிநிதியை கூட அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. இதன் மூலம் இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த வரலாற்றை அவர் புறந்தள்ளியுள்ளார். இதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் அவர் கூறிய ஸ்ரீலங்கன் எனும் ஜக்கியத்தை, அடையாளத்தை கொண்டதாக இச்செயற்பாடு அமையவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே புராதன இடங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் ஒருவரேனும் சிறுபான்மை இனத்தவர்களை உள்வாங்காமல் உறுப்பினர்களை நியமித்தார்.

உலகிலே 180 நாடுகளிலேயே பின்பற்றுகின்ற நடைமுறையை புறந்தள்ளி கொரோனா தொற்றுநோயால் இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை அவர் வலுக்கட்டாயமாக எரித்தார்.

அதேபோன்று ஆணைக்குழுக்களை அமைக்கின்றபோது அதில் ஒரு சிறுபான்மை பிரதிநிதிகளை கூட உள்வாங்காது தனிச்சிங்கள அதிகாரிகளை  நியமித்தார்.

இவ்வாறு ஒன்றுக்கு பின் ஒன்றாக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினை பார்க்கும்போது இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் அவர் மீது கொண்ட கடைசி நம்பிக்கையும் அற்றுப்போன ஒரு துக்ககரமான நிலையில் இந்த நாடு சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறி வந்த அவர் தேசியத்தை சுக்குநூறாக்கி இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையினை மேற்கொள்கின்றார். இதனை பார்க்கும்போது இந்த நாடு எங்கே போய் சேரப்போகின்றது எனும் கேள்விக்கு யாராலும் விடைகொடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.