பனங்காட்டு பாலம் அருகே விபத்து


வி.சுகிர்தகுமார்
 

  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனங்காட்டு பாலம் அருகே நேற்றிரவு(29) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பொலிஸ் மற்றும் பொதுமகன் உள்ளிட்ட இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர் பனங்காட்டை சேர்ந்த 39வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மற்றயவர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஒருவரும் என தெரியவருகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியதனால் சில மணிநேரம் பதற்ற நிலை உருவானது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்றிரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிசார் அவ்வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை  நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனாலும் மோட்டார் சைக்கிளின் வேகம் குறைவடையாத நேரத்தில்; மற்றுமொரு பகுதியில் இருந்து வீதிக்கு ஓடிவந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டுள்ளார். இதன்போதே குறித்த பொலிஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பனங்காட்டை சேர்ந்த ஒருவரும் பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில் 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதேநேரம் இருளான பிரதேசத்திந்குள் பொலிசார் நின்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதாலேயே இவ்வாறு சம்பவங்கள் நடைபெறுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ரி.நவனீதராஜ் கருத்து தெரிவித்தார்.

ஆகவே பொலிசார் தமது இரவு நேர சோதனை பணியினை வெளிச்சமான இடங்களில் நின்று மேற்கொள்ளும்போது இவ்வாறான சம்பவங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி பி.ரி.நசீரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது பணி. அதற்கு முழு ஒத்துழைப்பையும் தரவேண்டியது பொதுமக்களின் கடமை. அன்மைக்காலமாக அதிகளவான விபத்துக்கள் நடைபெறுவதனாலேயே நாம் வீதிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். ஆனாலும் சில இளைஞர்கள் பொலிசாரையும் சட்டத்தையும் மதியாது போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். அதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றது. ஆகவே பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.  

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.