சோனம் கபூர் டிவிட்டரில் கடும் விமர்சனத்துக்குள்ளானது ஏன்? #SonamKapoor

பாலிவுட் நடிகை சோனம் கபூர் கடந்த ஞாயற்று கிழமையன்று பகிர்ந்த ஒரு ட்வீட் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.  தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் பகிர்ந்த ட்வீட்டை சமூக வலைதளவாசிகள் கடுமையாக நக்கல் செய்தனர். இதனால் நாள் முழுக்க ட்விட்டர் டிரெண்டிங்கில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. 

'' தந்தையர் தினமான இன்று நான் இன்னொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஆம். நான் எனது தந்தையின் மகள். அவரால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். ஆம். நான் சிறப்பு சலுகை பெற்றவள். அது ஒன்றும் அவமானம் அல்ல. எனது தந்தை எனக்கு இதையெல்லாம் தர கடுமையாக உழைத்தார். என்னுடைய முன்வினைப்பயன்தான் நான் எங்கே எந்த குடும்பத்தில் பிறந்தேன் என்பதற்கு காரணம். நான் பெருமைப்படுகிறேன்'' இப்படி ஒரு ட்வீட்டை அவர் பகிர்ந்ததுதான் சர்ச்சைக்கு காரணம். 

யார் இந்த சோனம் கபூர்?

  • பிரபல நடிகர் அனில் கபூர் மகள்தான் சோனம் கபூர். 35 வயதாகும் சோனம் கபூர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சோனம் கபூர் நடித்து வெளியான 'சாவரியா' தான் அவரது முதல் படம். அந்த படம் தோல்வி அடைந்தது. 
  • இவர் தனுஷுடன் ராஞ்சனா என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்தவர். 
  • ஆனந்த் அகுஜா என்ற பிரபல தொழிலதிபரை மணந்துள்ளார். 
  • நீர்ஜா என்ற படத்துக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். 

சுஷாந்த் மரணமும் விமர்சனங்களும் 

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்  தற்கொலைக்கு பிறகு, பாலிவுட்டில் தெரிந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை, ஆதாயம்  அளிக்கப்படும் போக்கு குறித்த பேச்சுக்கள் தீவிரமடைந்தன. 

சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை  கூறுகிறது. இந்நிலையில் சுஷாந்த்துக்கு ஆதரவாக இணையத்தில் நிறைய பேர் எழுதத்துவங்கினர். பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற நடிகர், சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு மட்டுமே படம் தயாரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். 

பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோகரும் இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பலர் அவரது  டிவிட்டர் கணக்கை பின்தொடர்வதை நிறுத்தினர். 

சமீபத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது டிவிட்டர் கணக்கையே மூடிவிட்டார். எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகியிருக்கவும், மன நலனை பேணவும் விரும்புவதாக தெரிவித்தார். 

சோனு நிகம் என்ற பிரபல பாடகரும் இசைத் துறையில் ஒரு கலைஞருக்கு என்னென்ன மாதிரியான அழுத்தங்கள் இருக்கிறது என்பது குறித்து பேசியுள்ளார். குறிப்பாக இரண்டு  மாஃபியாக்களிடம் இருந்து காப்பாற்றாவிட்டால் இசைத்துறையில் இருந்தும் சில கெட்ட செய்திகள் வரக்கூடும் என எச்சரித்திருந்தார்.

ஊர்மிளா மடோன்ட்கர், கங்கனா ரணாவத் ஆகியோரும் பாலிவுட்டில் தெரிந்தவர்களுக்கு மட்டும் ஆதாயம் தரப்படும் பாணி குறித்து விமர்சித்திருந்தனர். திறமையான கலைஞர்கள் மற்றும் கடின உழைப்புக்கு அங்கு உரிய இடம் கிடைப்பதில்லை என வெளிப்படையாக குற்றம் சாட்டினர். 

இதையடுத்து பிரபலங்களின் வாரிசுகளின் சமூக வலைதள கணக்குகளில் அவர்களை திட்டி சில ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். ஆபாசமாகவும் அவர்களை திட்டியுள்ளனர். இந்த நிலையில்தான் சோனம் கபூர் இப்படியொரு டிவீட்டை பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதிய லட்சுமி நாராயண் என்பவர், ''சிறப்பு சலுகை கிடைப்பது ஒன்றும் மோசமான விஷயமல்ல, ஆனால் நீங்கள் எப்போதாவது உங்களது சிறப்பு சலுகையை தடுமாறும் கலைஞர்களை உயர்த்திவிட பயன்படுத்தியிருக்கிறீர்களா?  நாம் மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கும் விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். தெரிந்தவர்களுக்கு மட்டும் ஆதாயம் செய்யும் போக்கும் சிறப்பு சலுகை பெற்ற உயர்தர கூட்டமும்,  சிறு நகரில் இருந்து எந்தவித பின்புலனும் இல்லாமல்  கடுமையான உழைப்பை நம்பி வரும்  கலைஞர்களின் கனவுகளை நொறுக்கித் தள்ளுகின்றன. அவர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகளை மறுக்கின்றன மேலும் தட்டிப்பறித்துக் கொள்கின்றன'' என எழுதியிருந்தார். 

'' சோனம் கபூர் ஒடுக்குமுறை கட்டமைப்பையும், சமூகத்தில் நிலவும் சமமின்மையையும் கர்மா என்ற பெயரில்  நியாயப்படுத்துகிறார். ஏழை ஏழையாக இருப்பதற்கும், பணக்காரர் பணக்காரராக இருப்பதற்கும் தகுதி பெற்றவர் என சோனம் நம்புவது போல தெரிகிறது. மேட்டுக்குடி மனப்பன்மை உடைய ட்வீட் இது'' என அனியா அஸீஸ் என்பவர் பதிவிட்டுள்ளார். 

''சாதியத்துக்கு நவீன பெயர்சொல் தருகிறார் சோனம்'' என தேஜஸ் என்பவர் எழுதியுள்ளார். ''ஓ... சிறப்பு சலுகை கிடைப்பதும், ஏழ்மையும் நீங்கள் ஒருவரது கர்மாவை (முன்வினைப்பயன்) பொறுத்தது என்கிறீர்கள். அதாவது அவர்களது தந்தை கடுமையாக உழைக்கவில்லை எனச் சொல்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் சோனம்... ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்காக கடுமையாகவே உழைக்கிறார்கள்'' என மன்மீத் குறிப்பிட்டுள்ளார். 

அபிஷேக் சிங் இப்படி எழுதுகிறார் '' சோனம் கபூர் தான் ஒரு நடிகையாக இருப்பதற்கு காரணம் தனது தந்தை என ஒப்புக்கொண்டதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். தனக்கு திறமையில்லை, நான் சினிமா துறையில் இருப்பதற்கு எனது தந்தையின் செல்வாக்கால் காரணம் என  பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளளார். இதற்காக சோனமுக்கு மரியாதை செலுத்துகிறேன்''. Advertisement