1917 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்

குற்றச் செயல்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்களை வழங்குவதற்காக  இரண்டு துரித தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (27) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தத் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இரகசிய தகவல்களை வழங்க 1997 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 1917 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, பன்னிபிட்டியவில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

3 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிரத்தியேக வகுப்புகளை நடாத்தும் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரத்தியேக வகுப்பில் கலந்துகொண்ட சிறுவர்களை தனது வீட்டுக்கு அழைத்து சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேக நபரின் வீட்டலிருந்து மேலும் சில சிறார்களின் நிழற்படங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நிழற்படங்களிலுள்ள அனைத்து சிறார்களும் 16 வயதிற்கு குறைந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.


Advertisement