'நாமேட் அமல்' ஐக்கிய அரபு அமீரக விண்கலம்


செவ்வாய் கோளுக்கு முதல் முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.

இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவது சாரா அல் அமிரி எனும் பெண்.

நம்பிக்கை... அதுதானே எல்லாம்

1.3 டன்கள் எடையுள்ள இந்த விண்கலத்திற்கு ''நாமேட் அமல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ''நாமேட் அமல்'' என்பதன் பொருள் நம்பிக்கை. ஜப்பானிய தீவு ஒன்றிலிருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

உள்ளூர் நேரப்படி இந்த விண்கலம் புதன்கிழமை காலை 5.51 மணிக்குச் செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகம் செல்ல விரும்புவது ஏன்? அதன் திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசித்தரிப்புக்காக

செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஏறத்தாழ 500 மில்லியன் (50 கோடி) கி.மீ தொலைவு பயணிக்க வேண்டும். இந்த விண்கலம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு.

இந்த மாதம் செளதி அரேபியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?

விண்கலம் உருவாக்கத்தில் பெரிதாக அனுபவம் இல்லாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு முகமைகள் மட்டுமே சாதித்த ஒரு விஷயத்தை முயன்று பார்க்கிறது அமீரகம்.

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகம் செல்ல விரும்புவது ஏன்? அதன் திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைMBRSC

அமெரிக்க வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.

தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பதில்தான் அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் அதிக கவனம் செலுத்தப் போகிறது.

சரி. அமீரகம் இதில் அதிக கவனம் செலுத்துவது ஏன்?

விண்வெளி துறையில் அரேபிய இளைஞர்களை ஊக்குவிக்கத்தான். அரபு இளைஞர்கள் அறிவியல் கல்வியில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டும். அதற்கு இப்படியான சில முயற்சிகள் ஊக்குவிப்பாக இருக்கும் என அமீரகம் கருதுகிறது.

இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்புகிறது.

வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருக்க அமீரகம் விரும்பவில்லை. எதிர்காலத்திற்கான பல திட்டங்களை அமீரகம் வைத்திருக்கிறது, அதில் ஒன்று இந்த `நம்பிக்கை' திட்டம்.

ஆனால், அதே நேரம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவது அவ்வளவு சுலபமல்ல. அதில் ஏராளமான ஆபத்துகள் உள்ளன. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் பல முயற்சிகள் தோல்வியையே தழுவி இருக்கின்றன.

இருந்தபோதும் நாங்கள் மனம் தளரப் போவதில்லை என்கிறது அமீரகம்.

இந்த `நம்பிக்கை` திட்டத்தின் இயக்குநர் ஒம்ரான் ஷெரீஃப், "ஆம். ஆபத்துகளை உணர்ந்திருக்கிறோம். ஆனால், சரியான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறோம்," என்கிறார்.

மேலும் அவர், "இது ஓர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம். இதில் தோல்வி அடையும் ஆபத்து இருப்பதையும் ஒப்புக் கொள்கிறோம். இதில் வெற்றி அடைவதற்கான அனைத்து திறனும் அமீரகத்திற்கு இருக்கிறது. இதில் கிடைக்கும் அனைத்து படிப்பினைகளும் எதிர்காலத்தில் அமீரகத்திற்கு உதவும், " என்கிறார்

எப்படி இதனை சாத்தியமாக்கியது அமீரகம்?

அமீரக அரசு தொடக்கத்திலேயே இந்த திட்டத்தில் தொடர்புடையவர்களிடம் ஒரு விஷயத்தை கூறிவிட்டது. அதாவது, இதற்கான விண்கலத்தை வெளியில் வாங்கப் போவதில்லை. இதனை நாமே உருவாக்கப் போகிறோம், இதற்கான அனுபவம் மற்றும் கல்விக்கு மட்டுமே வெளிநாடுகளை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் அது.

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகம் செல்ல விரும்புவது ஏன்? அதன் திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைESA/DLR/FU BERLIN

இதற்காக அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அமீரகம் மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் இணைந்து பணியாற்றி இந்த விண்கலத்தை உருவாக்கி உள்ளனர்.

கொரோடா பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தங்களது அடுத்த திட்டத்தினை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் அளவிற்கான ஆற்றல் ரஷ்யாவுக்கு வந்துவிட்டது என்கிறார் கொரோடா பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்தின் மூத்த பொறியாளர்.

செவ்வாய் சென்று என்ன செய்ய போகிறது அமீரகம்?

'நானும் இருக்கிறேன்,' என இதனை மற்றொரு திட்டமாகச் செயல்படுத்த அமீரகம் விரும்பவில்லை. புதிய ஆய்வுகளை அங்கு மேற்கொள்ளவும், அந்த கிரகம் குறித்து புதிய தகவல்களைத் திரட்டவுமே அமீரகம் விரும்புகிறது.

அதனால் அது நாசாவை அணுகி, என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்டால் இப்போதுள்ள சூழலுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கேட்டிருக்கிறது.

செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மண்ணியல் தரவுகளை அளித்துள்ளன. ஆனால் இந்த அரபு விண்கலம் செவ்வாயின் காலநிலை குறித்த தரவுகளை மிகவும் துல்லியமாக அளிக்கும் என லண்டனை சேர்ந்த அறிவியல் அருங்காட்சியக குழுவின் இயக்குனர் லேன் பிளாட்ச்போர்ட் குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் புவியின் சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது.

யார் இந்த சாரா அல் அமிரி?

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகம் செல்ல விரும்புவது ஏன்? அதன் திட்டம் என்ன?படத்தின் காப்புரிமைMBRSC

இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கும் சாரா அல் அமிரி அமீரக அமைச்சரவையில் நவீன அறிவியல் துறைக்கான அமைச்சராகவும் உள்ளார்.

முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்தில் மென்பொறியாளராக அவர் முன்பு பணியாற்றி இருக்கிறார்.

அவர், "இந்த திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பாலின சமநிலையை பேணுகிறோம். இந்த திட்டத்தில் பணியாற்றும் அமீரகவாசிகளில் 34 சதவீதம் பேர் பெண்கள்," என்கிறார்.