வரலாற்றில் முதல்முறையாக பூமியில் குறைந்த அதிர்வுகளின் அளவு


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலால் உடல்நலம் தொடங்கி பொருளாதாரம் வரை எண்ணற்ற விடயங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில்தான் இயற்கையும், விலங்கினங்களும் புத்துணர்வு பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டின் முற்பகுதியில், உலகில் பொதுவாக எழும் அதிர்வுகளின் அளவு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நடப்பது, ஓடுவது உள்ளிட்டவற்றின் மூலம் மனிதர்கள் எழுப்பம் சத்தம் அல்லது அதிர்வுகளானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை நடவடிக்கைகளின் காரணமாக இந்த ஆண்டின் முற்பகுதியில் பாதியாகக் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


பெல்ஜியன் ராயல் அப்சர்வேட்டரி தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 70க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உலகின் 300 வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவை எட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களின் இயல்பான நடமாட்டம் மட்டுமின்றி சுற்றுலா, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கியுள்ளதால் உலகில் அதிர்வுகளின் அளவு குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா: வரலாற்றில் முதல்முறையாக பூமியில் குறைந்த அதிர்வுகளின் அளவுபட மூலாதாரம்,GETTY IMAGES
சீனா தொடங்கி இத்தாலி வரை உலகின் பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்ட முடக்க நிலையால் பூமியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இந்த ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் மார்ச் முதல் மே வரையிலான காலப்பகுதியில் மனிதர்களால் பூமியில் ஏற்படுத்தப்படும் அதிர்வொலிகள் ஐம்பது சதவீதம் வரை குறைந்துள்ளன.

முடக்க நிலை, சமூக விலகல், போக்குவரத்து நிறுத்தம், தொழிற்சாலைகள் மூடல் உள்ளிட்டவற்றின் காரணமாகப் பூமியில் சத்தம் குறைந்து காணப்பட்ட இந்த காலகட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம், நிலநடுக்கங்கள் மற்றும் மனிதர்களால் எழுப்பப்படும் அதிர்வுகள் உள்ளிட்டவற்றை தெளிவுற வேறுபடுத்தி பகுப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்


"நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் இனிவரும் காலங்களில் முன்பவை விட அதிகமான மக்கள் புவியியல் ரீதியாக அபாயகரமான பகுதிகளில் வாழ்வார்கள். ஆகவே, இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படும் சத்தத்தை வேறுபடுத்துவது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாகிவிடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூமியில் நிலவும் அதிர்வுகளைக் கேட்கவும் சிறப்பாகக் கண்காணிக்கவும் முடியும்" என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானியான தாமஸ் லெகோக் கூறுகிறார்.