முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது,சிறைத் தண்டணை


பல மில்லியன் டொலர்கள் கொண்ட ஊழல் வழக்குகளில் முதல் ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றங்காணப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது 12ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

1மலேசிய அபிவிருத்தி பெர்ஹத் நிதியத்தின் நிதியில் இடம்பெற்ற திருட்டு தொடர்பிலேயே அவர் மீதான முதல் வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 210மில்லியன் ரிங்கிட் அபராதம் வழங்கவும் நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.  

“இந்த வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கில் குற்றச்சாட்டுகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருப்பதை நான் கண்டறிந்தேன்” என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முஹமது மஸ்லான் முஹமது கசாலி அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.  

சுமார் ஈராண்டுகளுக்குப் பின்னர் நஜிப் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகப் பல்வேறு நபர்களிடம் 1எம்.டி.பி முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். 

அதனையடுத்து முதல் ஊழல் வழக்கில் நஜிப் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.  

2009தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 42மில்லியன் ரிங்கிட் தொகை பரிமாற்றப்பட்டதை மையமாகக் கொண்டதாகவே நேற்றைய வழக்கு இருந்தது.  

எனினும் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த நஜிப், நீதி ஆலோசகர்களால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரிவித்தார். நிதி மோசடி தொடர்பில் நஜிப் மேலும் சில வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ளார்.