2020 உண்மையிலேயே ஒரு மோசமான ஆண்டா?


 


பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம்.


பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால் இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக இருந்திருக்கலாம். 2020ஆம் ஆண்டை பகடி செய்து பல மீம்களும்கூட வலம் வந்து கொண்டிருக்கின்றன.


எனவே இது உண்மையில் ஒரு மோசமான ஆண்டா? தெரிந்து கொள்ள வரலாற்றை சற்று திரும்பி பார்க்கலாம். இது உலக நடப்புகளின் வரலாற்று ஒப்பீடு. வரலாற்றில் இதைவிட மோசமான சம்பவங்கள்கூட நிகழ்ந்திருக்கலாம். அவ்வாறு இருந்தாலும், நாம் நமக்கு நடந்த நல்லவற்றை மட்டும் நினைத்து மகிழ்ச்சியடைந்து கொள்வதே சிறந்த ஒன்று.


2020- கோவிட் -19 பலரை கொன்றுவிட்டது


டிசம்பர் 17 வரையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 74.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். இருப்பினும் இது உலகின் மோசமான பெருந்தொற்று என்று கூறிவிடமுடியாது. ஆம், புபோனிக் பிளேக் என்ற நோயால் 1346ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் மட்டும் 25 மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலக அளவில் 200 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.


1520ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீஸியர்களின் வருகையால் 60-90 சதவீத பூர்வீக குடிமக்கள் உயிரிழந்தனர்.


1918ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் ஃபுளூவால் 50 மில்லியன் பேர் உயிரிழந்தனர். முதல் உலகப் போரிலிருந்து திரும்பி வந்த சிப்பாய்களால் பரவியது இந்நோய்.


வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் பேர் உயிரிழந்தனர்.


அதன்பின் 1980ஆம் ஆண்டிலிருந்து கண்டு கொள்ளப்பட்ட எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் உலகளவில் 32 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.


2020 - பலர் தங்களின் பணிகளை இழந்தனர்


இந்த பெருந்தொற்றால் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இருப்பினும் 1929 -33ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு மந்தநிலையால் ஏற்பட்ட பணி இழப்புகள் அளவிற்கு இது இல்லை.


1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் மூன்றில் ஒருவர் தங்கள் பணியை இழந்தனர். அடோல்ஃப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார்.



2020 நண்பர்களை காண முடியவில்லை


இந்த ஆண்டு முழுவதும் பலர் தங்களின் அன்புக்குரியவர்களை காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் 536-ல் நடந்த அளவிற்கு மோசமில்லை. ஆம் அந்த சமயத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் ஒரு மர்மமான பனி சூழ்ந்து கொண்டு வானத்தைக்கூட காண முடியாத நிலை இருந்தது.


கிட்டதட்ட 18 மாதங்களுக்கு அந்த நிலை நீடித்தது என்கிறார் ஹார்வட் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் நிபுணர் மைகேல் மெக் கார்மிக்.


அது ஐஸ்லாந்திலோ அல்லது வட அமெரிக்காவிலோ நிகழ்ந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட புகையாக இருந்திருக்கலாம்.


எரிமலை

2020 - போலிசார் காட்டிய கொடூரம்


2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம், நைஜீரீயாவின் 'எண்ட்சார்ஸ்' இயக்கம், மற்றும் கொலம்பியா, ஹாங் காங், ஃபிரான்ஸ் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற போலிசாரின் அடக்குமுறை என இந்த ஆண்டு பல சம்பவங்கள் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன.