தொடரைக் கைப்பற்றிய இந்தியா

 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை துரத்தி விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இருப்பினும், இந்த டி20 தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீணான கோலியின் அதிரடி

ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் வெறும் இரண்டு பந்துகளையே சந்தித்த நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராத் கோலியும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானும் இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்ந்தனர். அடுத்து 28 ரன்களில் தவான் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

Ind Vs Aus

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க 12.6 ஓவர்களில் 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி. இருப்பினும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரைசதத்தை கடந்து நம்பிக்கை அளித்தார்.

கோலியுடன் சிறிது நேரம் நீடித்த கடந்த போட்டியில் பேட்டிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா, தன் பங்கிற்கு 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் அடித்த நிலையில் சம்பாவின் பந்துவீச்சில் பின்ச்சிடம் கேட்சானார்.

தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் விராத் கோலி போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஆண்ட்ரூ டை பந்தில் சாம்ஸிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 61 பந்துகளை சந்தித்த கோலி, மூன்று சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் என 85 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். ஆனால், அது இந்திய அணி வெற்றிப்பாதைக்கு செல்ல போதுமானதாக இல்லை.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் எவராலும் கடினமான கட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாததால், 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணியின் ஏழு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, மிச்சேல் ஸ்வீப்சன் நான்கு ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரும் கடந்த போட்டியில் பேட்டிங்கில் கலக்கியவருமான ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார்.

ஆஸ்திரேலியா அதிரடி பேட்டிங்

முன்னதாக, இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தது.

மேத்திவ் வேட் மற்றும் ஆரன் ஃபின்ச் முதலில் களமிறங்கினார்கள். மேத்திவ் நிதானமாக ரன்களைக் குவித்தார்.

ஆரன் ஃபின்ச் வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஃபின்ச் எந்த ரன்களையும் எடுக்கவில்லை. வேட் உடன் ஸ்மித் கைகோர்த்தார். இரண்டாவது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 14 ரன்களை எடுத்து இருந்தது ஆஸ்திரேலியா.

Ind Vs Aus

அதன் பின் நிதானமாக விக்கெட்டுகளை இழக்காமல் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது ஆஸ்திரேலியா.

10-வது ஓவரை விசிய வாசிங்டன் சுந்தர், தன் நான்காவது பந்தில் ஸ்மித்தை போல்டாக்கினார். ஸ்மித் வெளியேறும் போது, வேட் மற்றும் ஸ்மித்தின் கூட்டணி 65 ரன்களைக் குவித்து இருந்தது

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 82 ரன்களை எடுத்து இருந்தது.

11-வது ஓவரில் மேத்திவ் வேட் தன் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

மேக்ஸ்வெல், மேத்திவ் வேட் உடன் சேர்ந்து, மீண்டும் ரன் வேட்டையில் இறங்கினார். 15 ஓவர் முடிவில்

ஆஸ்திரேலியா அதே இரண்டு விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்து இருந்தது.

18-வது ஓவரில் மேக்ஸ்வெல் தன் அரைசதத்தை கடந்தார். 18 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை குவித்திருந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து நிதானமாக ரன்களைக் குவித்து வந்த மேத்திவ் வேடை, ஷர்துல் தாகூர் 19-வது ஓவரில் வீழ்த்தினார். 53 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்களைக் குவித்த மேத்திவ் வேட் எல்.பி.டபிள்யூவில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 175 ரன்களை குவித்திருந்தது ஆஸ்திரேலியா.

கடைசி ஓவரை வீசிய நடராஜன், மேத்திவ் வேட் உடன் இணைந்து ரன்களை விளாசிக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல் 36 பந்துகளை எதிர்கொண்டு 54 ரன்களை குவித்திருந்தார். 20-வது ஓவரின் நான்காவது பந்தில், ஷார்ட் ரன் அவுட் ஆனார்.

Ind Vs Aus

20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 186 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.

யுவேந்திர சாஹல் நான்கு ஓவர்களில் 41 ரன்களையும், தீபக் சஹார் 4 ஓவர்களில் 34 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்கள்.

ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 34 ரன்களைக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

நடராஜன் 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.Advertisement