ஆலையடிவேம்பில்,சட்ட நடவடிக்கை


 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 கொவிட் சட்டத்தை மீறி செயற்படும் குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 14ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கொவிட் 19 செயலணிக்கூட்டம் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன், சபையின் செயலாளர் ஆர்.சுரேஸ்ராம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எல்.நிமால், அக்கரைப்பற்று இராணுவ முகாம் அதிகாரி ஏ.ஜயானந்த உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய பணிமனை ஆகிய அரச திணைக்களங்கள் இணைந்து ஒலிபெருக்கி மூலம் கொவிட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், அனுமதி இல்லாத வியாபார நிலையங்ககளுக்கு எதிராக பிரதேச சபையுடன் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய பணிமனை இணைந்து சட்ட நடவடிக்கை எடுத்தல், இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரோந்து பணியில் ஈடுபடல் நடமாடும் சேவையில் ஈடுபடுவோர் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனரா என உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 8411 குடும்பங்களில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி பெற தகுதியுடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட 6056 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4733 குடும்பங்களுக்கு இதுவரையில் 5000 பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் ஊடாக உணவுத்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.