போதைப் பொருளுடன் நீர்கொழும்பில் இருவர் கைது



 11 மில்லியன்; ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் நீர்கொழும்பில் இருவர் கைது

 

 11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா, ஐஸ் மற்றும்  ஹெரோயின் போதைப் பொருளுடன் நீர்கொழும்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா தெரிவித்தார்.

 சந்தேக நபர்கள் இருவரும் இன்று  (7-12-2020) காலை  நீர்கொழும்பு கடோல்கலே விகாரை அருகில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நீர்கொழும்பு , ஜயரத்ன மாவத்தையைச் சேர்ந்த  33 வயதுடைய நபரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 20 பக்கற்றுக்களில் பொதி செய்யப்பட்ட   40 கிலோ கிராம்  கேரளா கஞ்சா, 200 கிராம் ஹெரோயின் , 200 கிராம் ஐஸ் போதைப் பொருள், மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் 30 ஆயிரம் ரூபா பணமும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி  65 இலட்சம் ரூபா எனவும், ஐஸ் போதைப் பொருளின் பெறுமதி 18 இலட்சம் ரூபா எனவும், ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த போதைப் பொருட்களை நீர்கொழும்புக்கு கொண்டு வந்துள்ளதாகவும்  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேராவின் வழிகாட்டலுக்கு அமைய, பிராந்திய குற்றம் மற்றும் ஊழல் ஒழிப்புப்  பிரிவின் பொறுப்பதிகாரி சம்பத் திசாநாயக்கவின் தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக  நபர்களை நாளை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.