அக்கரைப்பற்று விவசாயிகள், தமது வயல் நிலங்களுக்குச் செல்ல அனுமதி கோரி


 


அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள்; தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை 5 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புட்டம்பை கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக பசளை மற்றும் கிருமிநாசினிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் காத்திருந்தனர்.



ஆனாலும் அவர்களுக்கான அனுமதி கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் மறுக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் எப்படியாவது தங்களுக்கு அனுமதி தரவேண்டும் என கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் 11ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் 171 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை அடிப்படையாக கொண்டே சுகாதாரத்துறையினர் விவசாயிகளை வெளியேறாமல் தடுத்து வைத்திருப்பதாகவும் இதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்வதாகவும் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் வேளாண்மை பயிரானது 60 நாட்களை கடந்த நிலையில் அறுவடைக்காக இன்னும் 40 நாட்களே உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதற்கான உரம் இடல் மற்றும் களை பிடுங்குதல்;, பூச்சிகளின் தாக்கத்திலிருந்து காப்பற்ற களைநாசினி விசிறல் போன்ற செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் விவசாய செய்கையினை கைவிடவேண்டிவரும் எனவும் கவலை தெரிவித்தனர்.
மேலும் யானைகளின் வருகை வயல் பிரசேத்தில்; அதிகரித்து வரும் நிலையில் யானைக்கூட்டம் வயல்வெளியில் உட்புகுந்தால் தங்களது விவசாய செய்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தற்போதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
ஆகவே இதற்கான ஒரு பொறிமுறையை விரைவாக உருவாக்கி விவசாயிகளை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 9000ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இச்செய்கையில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் குறித்த பிரதேசம் பாரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும்; என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.