அங்குரார்ப்பணம்



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


உற்பத்தி கிராமம்  (நிஸ்பாதன கம்மானய)தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 3 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் இன்று(2) ஆரம்பிக்கப்பட்ட 3 திட்டங்கள் இன்று அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மஞ்சள் உற்பத்தி தொடர்பாக உகண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியும் பனம் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியிலும் கோழிக்குஞ்சு மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 5 இடங்களான அன்னமலை -2 நாவிதன்வெளி-1 சொறிக்கல்முனை -1 சவளக்கடை -1 நாவிதன்வெளி-2 என்பன அடையாளம் காணப்பட்டு பணம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பிலான நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு பனை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது

இதன் போது இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதனின் அழைப்பினை ஏற்று வருகை தந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன பரிபாலன இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் சுபுன் உதார திசாநாயக்க ஆகியோர் இணைந்து  இன்று(2)    உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

பனை அபிவிருத்தி திணைக்களத்தின் அணுசரணையில் கிராமத்தில் உள்ள  பெண்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்காக  பனைசார் உற்பத்தி பொருட்களின் விற்பனை செயற்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக   பனை அபிவிருத்தி சபைக்கான வியாபார நிலையத்தை பார்வையிட்ட அரச அதிபர்  மேலதிக அபிவிருத்தி  மனிதவலு கட்டிட வசதிகள் வாகன வசதிகள் குறித்து ஆராய்ந்து நிவர்த்தி செய்து தருவதாக கூறினார்.

இது தவிர பெண்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்காக  பனைசார்உற்பத்தி பொருட்களின் விற்பனை செயற்பாட்டையும் ஊக்குவிக்கும் முகமாக அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப்பொருட்களை பார்வையிட்டு ஊக்குவிப்புகளை வழங்கியதுடன் சந்தை வாய்ப்பினை எதிர்காலத்தில்  பெற்று தர ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது நாவிதன்வெளி  பிரதேச   செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன்    கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்  பனை அபிவிருத்தி சபைக்கான  அம்பாரை மாவட்டப் பணிப்பாளர்   விஜயன்  மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அ.ஆனந்த   உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரி பயிலுநர்கள்,   என பலர் கலந்து கொண்டனர்