மக்களை பாதுகாக்கும் பணியில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து இராணுவத்தினரும் செயற்படுவர்

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  இனிவரும் காலத்தில் மக்களை பாதுகாக்கும் கிராமத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து இராணுவத்தினரும் செயற்படுவர் என இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்களுடனான கலந்துரையாடலில் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர் வி.பபாகரன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

அதில் ஒரு கட்டமாகவே சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் நாட்டில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார். இதற்கமைவாக ஆலையடிவேம்பில் குற்றச் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். அல்லது நிறுத்தப்படும். இதற்கு சிவில் பாதுகாப்பு குழுக்கள் பூரண பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினரும் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். இதன் அடிப்படையில் நமது பிரதேசம் பாதுகாப்பான பிரதேசமாக மாற்றப்படும் என நம்பிக்கை தெரிவி;த்தார்.

இதேநேரம் கிராமத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள கிராம அலுவலர் மற்றும் பொலிசார் ஆகியோருடன் மேலதிகமாக இராணுவ வீரர் ஒருவரும் இணைந்து பணியாற்றுவர் எனவும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இங்கு இராணுவத்தினர் தெரிவித்தனர்.

  இதேநேரம் சூதாட்டம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தல் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு தடையாக வீதிகளில் நடமாடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்களும் முன்மொழியப்பட்டன.  அத்தோடு சிவில் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்த கருத்துக்களுக்கும் கவனத்தில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் சிவில் பாதுகாப்பு குழுவினரும் இராணுவத்தினரும் இணைந்து பணியாற்றுவதை அதிகமானவர்கள் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்;;ளிட்ட அரச அதிகாரிகள் இராணுவத்தினர் சிவில் பாதுகாப்பு குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.