புனித நோன்பிற்காக இடை நிறுத்தம்



பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)


புனித நோன்பு தினம் ஆரம்பமாகியுள்ளமையினால் சம்மாந்துறை டிப்போ தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுழற்சி முறையிலான போராட்டம் 9 ஆவது நாளில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை(13) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றினை மேற்கொண்ட குறித்த ஏற்பாட்டாளர்கள் 9 ஆவது நாளாக இடம்பெற்ற தமது போராட்டம் வெற்றி பெறும் தறுவாயில் உள்ளது எனவும் எதிர்வரும் 20 ஆம் திகதி அளவில் நம்பிக்கை தரக்கூடிய முடிவு ஒன்றினை பொறுப்புவாய்ந்த சிலர் பெற்று தரவுள்ளதாக உறுதியளித்துள்ள நிலையில் புனித நோன்பின் மாண்பினை கருத்திற்கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக கூறினர்.

அத்துடன் இதுவரை தமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பகுதியில்  அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை வாழ் மக்கள்  9 நாட்களாக    அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்து வேட்டை உள்ளிட்ட பல முன்னெடுப்புகளில்  செயற்பட்டிருந்தனர்.

கடந்த  போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்  உட்பட இளைஞர்கள் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் இவ்விடயம் குறித்து  அரசாங்க அதிபர் போக்குவரத்து அமைச்சர் பிரதமர் ஜனாதிபதி ஆகியோருக்கு  கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாகவும்  அரசியல்வாதிகள் பலரும் தீர்வுகளை பெற்றுத்தருவதாக எங்களை ஏமாற்றுவதாகவும் அதனால் அவர்களை நம்பாது தொடர்ந்தும் தீர்வு கிட்டும்வரை இவ்வாறு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறினர்.


மேலும் கடந்த காலங்களில் இது தொடர்பில் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அரச உயர்மட்டம் முதல் குறித்த இலாக்காவுக்கு பொறுப்பான அமைச்சர்கள் வரை பேசியிருந்தும் இவ்விடயம் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.