"மரணத்தில் இருந்து மீண்ட மும்பை இந்தியன்ஸ் அணி"


 


நேற்றைய ஐபிஎல் போட்டியின் கடைசி 5 ஓவரைப் பார்க்காதவர்கள் நிச்சயமாக போட்டியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஏன் போட்டியை நேரலையில் கண்டவர்கள்கூட முடிவு இப்படி அமையும் என நம்பியிருக்க மாட்டார்கள்.

வீரேந்திர சேவக்கின் மொழியில் சொல்வதென்றால் "கடைசி 5 ஓவர்களில் மரணத்தில் இருந்து மீண்டது மும்பை இந்தியன்ஸ் அணி".

30 பந்துகளில் 31 ரன்கள் தேவை. கையில் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதத்துக்கும் அதிகம் என கணிப்புகள் கூறிக் கொண்டிருந்தன. கடைசி இரண்டு ஓவர்கள் இருக்கும்போதுகூட இந்தக் கணிப்பில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கணிப்புகளைத் தகர்த்துவிட்டார்கள்.

சாஹரின் சுழல் தந்த "திருப்பம்"

முதலில் ஆடிய மும்பை இந்திய அணி 152 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதைக் கொண்டு வெற்றி பெறுவது மிகக் கடினம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஓவருக்கு எட்டு ரன்கள் கூட தேவைப்படவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முதல் விக்கெட்டுக்கு நிதிஷ் ராணா, சுப்மன் கில் இணை 72 ரன்களைக் குவித்தது. அந்த இணையைப் பிரித்தவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர். பின்னர் ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், நிதிஷ் ராணா என அடுத்தடுத்த வீரர்கள் சாஹரின் சுழலில் சிக்கி வீழ்ந்தார்கள்.

அரைச்சதம் அடித்து நின்ற ராணாவை 15-ஆவது ஓவரின் இறுதியில் மிகக் துல்லியமான ஏமாற்றி, ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றியதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை.

கணிப்புகளை மாற்றிய டெத் ஓவர்ஸ்

க்ருணாள் பாண்ட்யா

பட மூலாதாரம்,BCCI / IPL

படக்குறிப்பு,

க்ருணால் பாண்ட்யா

ராணா ஆட்டமிழந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு வந்துவிடவில்லை. அது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை. ஏனென்றால் 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணிக்குத் தேவைப்பட்டது.

ஆனால் அடுத்த 5 ஓவர்களில்தான் மாயாஜாலத்தை நிகழ்த்தினார்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள். 16-ஆவது ஓவரில் க்ருணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. அப்போதும் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் வந்துவிடவில்லை. ஏனெனில் 24 பந்துகளில் 30 ரன்கள்தான் தேவை. இருப்பது 6 விக்கெட்டுகள். கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ஆனால் மீண்டும் 18-ஆவது ஓவரை வீசிய க்ருணால் பாண்ட்யா வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து கொல்கத்தாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தினார். கடைசி இரண்டு ஓவர்களை பும்ராவும், போல்ட்டும் கச்சிதமாக வீசினார்கள். இரண்டு ஓவர்களையும் சேர்த்து வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது கொல்கத்தா அணி.

கடைசி இரு பந்துகள் வீசப்படும் வரை தோல்வியின் பிடியில் இருந்த மும்பை அணி, சட்டென வெற்றி பெற்றதை மரணத்தில் இருந்து மீண்டதாக வீரேந்திர சேவக்கின் பாணியிலேயே கூறலாம்.