கலாநிதி எஸ்.அமலநாதனால்,தொகுக்கப்பட்ட நுால் தொகுதி கையளிப்பு 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளாரும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான கலாநிதி எஸ்.அமலநாதனினால் படைப்பாக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும் எனும் நூலின் ஒரு தொகுதி இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலாநிதி எஸ்.அமலநாதன் கலந்து கொண்டு நூலினை கையளித்தார்.

38 வருட அரச சேவை அனுபவத்தினை கொண்ட அவர் 31 வருடங்கள் இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக பல்வேறு பட்ட பதவிகளை பொறுப்பேற்று செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் இலங்கை நிருவாக சேவை உள்ளிட்ட பல்வேறு உயர் பரீட்சைகளில் கலந்து கொண்டு சித்தியடைகின்றவர்களின் விகிதத்தினை தமிழ் பேசும் பிரதேசங்களில் அதிகரிக்க வேண்டும் என ஆசை கொண்டார்.

இதற்கு தடையாக இருப்பது முறையான பரீட்சை தொடர்பில் அறிந்து கொள்ளும் சுருக்கமான விளக்கமான புத்தகங்களை இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். இதன் அடிப்படையில் பரீட்சைகளுக்கு தேவையான தாபனக்கோவை மற்றும் நிதிப்பிரமாணங்கள் அடங்கிய விளக்கமான புத்தகம் ஒன்றினை வெளியிட எண்ணம் கொண்டு சிலரது ஆலோசனையின் பிரகாரம்  குறித்த நூலினை படைப்பாக்கம் செய்து அரச அலுவலங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வருகின்றார்.

இதன் அடிப்படையில் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அவர் நூலின் உள்ளடக்கம் மற்றும் கற்கும் முறை தொடர்பிலும் விளக்கியதுடன் எதிர்காலத்தில் இதன் மூலம் உத்தியோகத்தர்கள் நன்மை அடைவதே தனது நோக்கம் என்றார்.

விசேடமாக இந்நூலில் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பாக தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இக்கூட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் நூலின் ஒரு தொகுதி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.