அக்கரைப்பற்று நோநேம் கிரிக்கெட் அணி வெற்றி

(எஸ்.எம்.அறூஸ்)

 

அக்கரைப்பற்று நோநேம் கிரிகெட் அணிக்கும், நிந்தவுர் இம்ரான் கிரிக்கெட் அணிக்குமிடையிலான நட்புறவு கடினபந்து கிரிக்கெட் போட்டியில் நோநேம் அணி 4 ஓட்டங்களினால்  வெற்றியைப் பெற்றுக்கொண்டது.


நிந்தவுர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இம்ரான் அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோநேம் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். 


இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரா்களான இம்ராஸ் கான்  25 பந்துகளுக்கு முகம்கொடுத்து 61 ஓட்டங்களையும், சஹீன் 34 பந்துகளுக்கு முகம் கொடுத்து 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


இதில் இம்ராஸ் கான் 4 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளை அடித்ததுடன், சஹீன் ஒரு சிக்ஸரையும், 7 பவுண்டரிகளையும் அடித்தார். மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரான அத்தீப் 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


பந்துவீச்சில் இம்ரான் அணியின் சார்பாக றிஸ்னி 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களையும்,வஸீம் 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும், நிக்ஸி அஹமட் 45 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.


வெற்றி பெறுவதற்கு 199 ஓட்டங்களைப்பெறுவதற்காக பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இம்ரான் அணியினர் 8 விக்கட்டுக்களை இழந்து 20 ஓவர் முடிவில் 194 ஓட்டங்களைப்பெற்று 4 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர்.


இம்ரான் அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் றிஸ்னி 36 பந்துகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களையும், றிப்னாஸ் 14 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்களையும்,நஜாத் 12 பந்துகளை எதிர்கொண்டு 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதில் றிஸ்னி 2 சிக்ஸர்களையும், 9 பவுண்டரிகளையும் விளாசினார்.


பந்துவீச்சில் நோநேம் அணியின் சார்பாக முகம்மட் அலி 33 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும்,பஸாட் 36 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும்,சப்னி 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும், இம்ராஸ் கான் 43 ஓட்டங்களைக்கொடுத்து ஒரு விக்கட்டினையும் கைப்பற்றினார்.


இதன் மூலம் அக்கறைப்பறு நோநேம் அணியினர் 4 ஓட்டங்களினால் நிந்தவுர் இம்ரான் அணியினரை தோற்கடித்தனர்.


அக்கறைப்பற்றுப் பிராந்தியத்தில் நோநேம் கடினபந்து கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.