ஆராய்ச்சியாளர் -பன்னூலாசிரியர்- புள்ளிவிபரவியலாளர்- ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு, இடையறாது இயங்கி வந்த அன்புக்குரிய எம்.ஐ.எம்.முஹியத்தீன் அவர்கள் கொழும்பில் இறையடி சேர்ந்து விட்டார்.
இறக்கும்போது அவருக்கு 85 வயது.
அன்னாரது பாவங்களை மன்னித்து, அல்லாஹ் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற அரசியல் கட்சியை நிறுவி, அதன் செயலாளர் நாயகமாக இருந்து சளைக்காமல் செயற்பட்டார். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர். முஸ்லிம் செய்தி பத்திரிகையின் ஆசிரியர்.
ஆழ்ந்த சமூக ஈடுபாடு கொண்டவர். தன் சொந்த நிதியைச் செலவிட்டு பல பெறுமதியான நூல்களையும் ஆவணங்களையும் அச்சிட்டு வெளியிட்டவர். பதியுதீன் மஹ்மூத் தலைமையில், புலிகளோடு சென்னையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாட்களில், பழைய அரிசி ஆலைக் கட்டிடத்தைப் புனர் நிர்மாணம் செய்தவர். சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர். யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியவர். நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகன்.
அக்கரைப்பற்று 2 ஆம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதானை நொறிஸ் கனல் வீதியில் மிக நீண்டகாலமாக வசித்து வந்தார். தன் வீட்டையே ஒரு ஆவணக் காப்பகமாக ஒழுங்கமைத்திருந்தார்.
எனது நேசத்திற்குரிய எம்.ஐ.எம்.முஹியத்தீனின் இழப்பு மிகுந்த கவலையைத் தருகிறது. இது அவரை இறுதியாக அவரது வீட்டில் சந்தித்தபோது எடுத்த படம். இறுதியாக சந்தித்தபோது, நுறைச்சோலை வீடுகளைப் புனர்நிர்மாணம் செய்வது தொடர்பில் அதிக அக்கறையோடு பேசினார்.
குறிப்பு:
மரணித்த தகவலை குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர். ஜனாஸா விபரங்களை பின்னர் அறியத் தருகிறேன்.

Post a Comment
Post a Comment