13 கிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றல். சொகுசு காருடன் ஒருவர் கைது




 வி.சுகிர்தகுமார் 0777113659 

 கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சொகுசு காரொன்றிலிருந்த 13 கிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரையும் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சாலையின் முன்பாக வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த ஜஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

விசேட அதிரடிப்படையின் அம்பாரை மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தர மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் நளின் பெரேரா மற்றும் டி.சி.வௌpதாவிட்டான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உதவி பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ்.பி.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அழைப்பை விடுத்து அவரை வரவழைத்து பேசிக்கொண்டிருக்கையிலேயே சம்மந்தப்பட்டவர் மாறு உடையில் சென்ற விசேட அதிரடிப்படையினரால்; கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரின் அதி சொகுசு கார் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றபட்ட ஜஸ் போதைப்பொருளையும் கைது செய்யப்பட்டவரையும் காரையும் அக்கரைப்பற்று பொலிசாரிடம் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை ஒப்படைத்தனர்.