திருக்கோவில் பொலிசில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நான்கு பொலிசார் பலி



 


(சுகிர்தகுமார் 0777113659 )



  திருக்கோவில் பொலிசில் நேற்றிவு(24) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நான்கு பொலிசார் பலியானதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் மேலும் இரு பொலிசார் - பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் இருவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஒருவரும் இன்று காலை ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

சம்பவத்தில் தமிழர் முஸ்லிம்; என இரு பொலிசாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் பலியான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சார்ஜன் தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரியும் இரு துப்பாக்கி மற்றும் ரவை கூடுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயை பார்த்த பின்னர் அவரது சொந்த ஊhரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் , பிபில மற்றும் சியம்பலாண்டுவ
 பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த என அழைக்கப்படுகின்றவர்கள் உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

துப்பாக்கி சூட்டை மேற்கொண'ட பொலிஸ் சார்ஜன் பொலிஸ் நிலையத்தில் முன்காவல் கடமையில் இருந்த பொலிசார் ஒருவரின் துப்பாக்கியை பறித்தே ஏனைய உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
இவர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
சடலங்கள்  திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று,  கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்ள்ளது.
இதேநேரம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விசேட தடயவியல் பொலிசார் இணைந்து மேற்கொண்டுவரும் நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச்.முகமட் ஷம்சா திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இரு சடலங்களையும் பார்வையிட்டார்.